தஞ்சாவூர்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யணும்
தஞ்சையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சிறப்பு தலைவர் கு. பாலசுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கொண்டு வந்துவிட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
ஆனால் தமிழ்நாடு அரசு இதுவரை புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அரசு ஊழியர்களின் பல ஆண்டு கோரிக்கையை இன்னும் நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது . உடன் அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஸ்மாக்கில் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்யணும்
ஓய்வூதியம் ரூ.2000 பெறுபவர்களுக்கு அfவிலைப்படியும் அதனோடு சேர்த்து வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, டாஸ்மாக், பட்டு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் கூட இதுவரை பணி நிரந்தரம் செய்யவில்லை. தூய்மை பணியாளர்களுக்கு மாநில நிதியில் இருந்தும், தூய்மை காவலர்களுக்கு மத்திய நிதியிலிருந்தும் ஊதியம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ஒரே பணி தான் என்றாலும் ஊதியம் விஷயத்தில் முரண்பாடுகள் உள்ளன. எனவே ஊதிய முரண்பாடுகளை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்திற்கு ரூ.13500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 3 துறைகளின் கீழ் பொதுவிநியோகத் திட்டம் இயங்குகிறது. அதனை மாற்றி ஒரு துறையின் கீழ் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேர்மையான முறையில் பதவி உயர்வு செய்ய வேண்டும். அரசாணைப்படி இடம் மாறுதல் செய்ய வேண்டும். மதிய உணவு திட்டத்தில் பணி செய்பவர்களையே காலை உணவு திட்டத்திற்கும் பயன்படுத்த வேண்டும்.
மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
இதுபோன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தொடர்ந்து அக்டோபர் 17-ந் தேதி மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்.
இந்த இரண்டு கட்ட போராட்டங்களிலும் தீர்வு எட்டப்படவில்லை என்றால் நவம்பர் மாதத்தில் போராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநிலத் தலைவர் சுகமதி, துணைத் தலைவர் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.