தஞ்சாவூர்: தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் பெரிய கோயில், தலையாட்டி பொம்மை, கலைத்தட்டுகள் வரிசையில் கண்ணாடி கலைப் பொருட்களுக்கு முக்கியமான இடம் உண்டு. 20க்கும் அதிகமான கலைஞர்கள் ஈடுபட்டு வந்த இந்த தொழிலை தற்போது ஓரிருவர் மட்டுமே செய்து வருவது வேதனைக்குரிய ஒன்றாகும். இந்த பாரம்பரியமிக்க கலை அழிந்து போய் விடாமல் இருக்க வாலிபர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


கண்ணாடி கலைப் பொருட்கள்


தஞ்சாவூர் சோழர் காலம் முதல் கலைகளுக்கு தாயகமாகத் திகழ்கிறது. கட்டிடக்கலையாக இருந்தாலும் சரி... கலைத்தட்டுக்களாக இருந்தாலும் சரி, தலையாட்டி பொம்மையாக இருந்தாலும் தஞ்சாவூரின் பெருமை உயர, உயரதான் பறக்கிறது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் ஓவியம், கலைத்தட்டு, தஞ்சாவூர் வீணை, நெட்டி போன்றவற்றின் வரிசையில் தஞ்சாவூர் கண்ணாடி கலைப் பொருட்களின் இடமும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். 


தஞ்சாவூர் கண்ணாடி கலைப் பொருள்கள் நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் வந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர், ஆனால், மராட்டிய மன்னரான இரண்டாம் சரபோஜி மன்னர் அளித்த ஆதரவுதான் இக்கலை வளர்ச்சி அடைய காரணமாக இருந்துள்ளது. மராட்டியர் மன்னர்கள் காலத்தில் தஞ்சாவூர் ஓவியத்துக்கு மெருகூட்டுவதற்காகப் பக்கவாட்டில் கண்ணாடித் துண்டுகள் பொருத்தும் பழக்கம் இருந்துள்ளது. அதுதான் நாளடைவில் கண்ணாடித் துண்டுகளிலிருந்து கலைப்பொருள்களை உருவாக்கும் விதமாக பரிணாம வளர்ச்சி பெற்று அசத்தல் கலைப்பொருளாக கண்ணாடி கலைப்பொருட்கள் மாற்றம் பெற்றன. கலர் கலரான 1 கண்ணாடித் துண்டுகளைக் கொண்டு பல வகையான கலைப்பொருள்கள்  தயாரிக்கப்படுகின்றன. 




பள்ளியறை மண்டபம்


தொடக்கக் காலத்தில் கோயில் சுவாமி வாகனம், பள்ளியறை மண்டபம், பல்லக்கு போன்ற கோயில் தொடர்பான பொருள்கள் மட்டுமே செய்யப்பட்டன. காலப்போக்கில் திருமண மண்டபத்தில் தூண்கள், வளைவுகள், மணவறை போன்றவை கண்ணாடி பொருள்களால் அலங்காரம் செய்யப்பட்டன. இவை மேலும் வளர்ந்து கோயில் பல்லக்கு, குதிரை, கருட  வாகனங்களில் கண்ணாடித் துண்டுகளைப் பதித்து அலங்காரம் செய்யும் அளவிற்கு உயர்ந்தன. சாதாரணமாக இருக்கும் சிறிய பொருட்கள் கூட அபரிமிதமாக அற்புதமாக காட்சியளிக்கும் வகையில் கண்ணாடிப் பொருட்களால் மாற்றம் அடைந்தன.


சாதாரண மக்களும் வாங்கும் விதமாக பூர்ண கும்பம், தட்டு, வீடுகளில் பூஜை மண்டபம், குடம், செம்பு, கூம்பு போன்றவற்றிலும் கண்ணாடி பொருள்களால் அலங்காரம் செய்யப்பட்டன. தாம்பூலத்தட்டு, சந்தன கிண்ணம், குங்குமச்சிமிழ், நகைப்பெட்டி, அரசாணிப்பானைகள் (அடுக்கு பானைகள்), சில்வர் உருளி பானைகள் போன்றவற்றிலும் கண்ணாடித் துண்டுகள் அழகுடன், கலை நயத்துடன் பதிக்கப்படுகின்றன. ரசம் பூசப்பட்ட கண்ணாடிகள், பாரம்பரிய பச்சை, சிவப்பு நிற வண்ணம் பூசப்பட்ட கண்ணாடிகள், தங்கப்பட்டை, சுக்கான் தூள், புளியங்கொட்டைத் தூள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேவையான வடிவங்களில் இந்தக் கண்ணாடிப் பொருள்கள் செய்யப்படுகின்றன.


20க்கும் அதிகமானோர் செய்து வந்த தொழில்


ஆரம்பக்காலத்தில் 20க்கும் அதிகமான குடும்பத்தினரின் தொழில் என்றால் இந்த கண்ணாடி கலைப்பொருட்கள் தயாரிக்கும் தொழில் மட்டுமே. இன்றோ ஓரிருவர் மட்டுமே இத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இத்தொழிலை சுமார் 45 ஆண்டுகளாக  தஞ்சாவூர் தெற்கு வீதியைச் சேர்ந்த செல்வராஜ் (64), வனஜா (52)  தம்பதியினர் பாரம்பரியமாக செய்து வருகின்றனர், 




இந்தக் கண்ணாடி கலைப்பொருள்கள் வடிவத்துக்கு ஏற்ப ரூ. 150 முதல் ரூ. 1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொருட்களின் வகைக்கும், அவற்றின் வடிவத்திற்கும் ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜ் கூறுகையில்., இக்கலையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதற்காக ஆர்வத்துடன் முன் வருபவர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு உதவி செய்ய வேண்டும், வெளிநாட்டில் இப்பொருளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.


தஞ்சையின் பெருமை மேலும் அதிகரிக்கும்


இளைஞர்கள் ஆர்வமாக இத்தொழிலை கற்றுக் கொண்டால் இக்கலையின் மூலம் தஞ்சையின் பெருமை மேலும் அதிகரிக்கும். இப்போது மிக மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இத்தொழிலை செய்து வருகின்றனர். அழியும் நிலையில் உள்ள இந்த கலையின் பெருமையை உணர்ந்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.