தஞ்சாவூர்: சொத்துத் தகராறில் உறவினரை கொன்ற வழக்கில் பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது முதல்முறை என்பதும் குறிப்பிட்டத்தக்கது. 


சொத்தில் பங்கு கேட்டு தகராறு


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வடசேரியை சேர்ந்த உத்திராபதி. இவரது அண்ணன் ராமமூர்த்தி, தம்பி சின்னப்பா. இந்நிலையில் ராமமூர்த்தி மனைவி பிரேமாவதி (50). சின்னப்பா ஆகியோர் உத்திராபதியிடம் சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். 


தூண்டுதலில் நடந்த கொலை
 
இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் பிரேமாவதி துாண்டுதல் பேரில், கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி தனது அண்ணன் உத்திராபதியிடம், சின்னப்பா சொத்துக்கேட்டு தகராறு செய்து வெட்டிக்கொலை செய்தார். இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து உத்திராபதியின் மகள் சுமித்ரா அளித்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னப்பா மற்றும் கொலைக்கு துாண்டுதலாக இருந்த பிரேமாவதியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


2018ம் ஆண்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்


இவ்வழக்கு தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு ஏப். 30ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கின் முதல் குற்றவாளியான சின்னப்பா கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து இரண்டாம் எதிரியான பிரேமாவதி வழக்கில், முதல் நபராக சேர்க்கப்பட்டார். 


இரட்டை ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி


இந்நிலையில் நேற்று பட்டுக்கோட்டை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மணி வழக்கினை விசாரணை செய்து, பிரேமாவதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராத தொகையும் விதித்து தீர்ப்பு கூறினார். கொலை வழக்கில் பெண் ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்படுவது தஞ்சை மாவட்டத்தில் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் நீதிமன்ற தலைமைக் காவலர் புனிதா ஆகியோரை தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ்ராவத் வெகுவாக பாராட்டினார்.