தஞ்சாவூர்: நகரை சுத்தமாக வைத்துக் கொள்ளும் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு புத்தாடைகள் வாங்கி கொடுக்கும் நெகிழ்வான நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடந்தது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதிகாலை முதல் நகரை தூய்மைப்படுத்தும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இவர்களின் அசராத பணியால்தான் தஞ்சை மாநகர் பளிச்சென்று குப்பைகள் இல்லா நகரமாக உள்ளது.
ஊரே தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடும்போது பொதுமக்கள் வீசியெறியும் குப்பைகளை அன்று கூட தூய்மைப்படுத்தும் பணியில் தூய்மைப்பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி தூய்மை பணியாளர்கள் தங்களது கடமையில் நாள் தவறாது பணி செய்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
'சுத்தம் சோறு போடும்' என்ற முதுமொழிக்கு ஏற்ப தூய்மை இந்தியா எனும் வாசகத்தை முன்னிறுத்தி பல்வேறு சுகாதார திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. கிராமம், நகரம் என அனைத்தின் சுகாதாரத்திலும் தூய்மை பணியாளர்களின் பங்கு மிகவும் அளப்பரியது. மக்களின் சுகாதார நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பண்டிகை நாளன்று கூட தங்களது குடும்பத்துடன் அந்த பண்டிகையை கொண்டாடாமல் பணிகளில் துரித கவனம் செலுத்தி நகரை தூய்மைப்படுத்துகின்றனர்.
இப்படி எந்நாளும் சளைக்காமல் மழை, வெயில் பாராமல் உழைக்கும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவரையும் பிரபல துணிக்கடைக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு பிடித்த புத்தாடையை தேர்வு செய்ய வைத்து அதை வாங்கிக்கொடுக்கும் நிகழ்வு தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சை மாநகராட்சி 12-வது டிவிஷனை சேர்ந்த தூய்மை பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள், அனிமேட்டர் உள்ளிட்ட 40 பணியாளர்கள் மற்றும் அவர்களின் அதாவது ஒவ்வொரு பணியாளரின் குடும்பத்தார் என சுமார் 150 பேரை ஜோதி அறக்கட்டளை நிர்வாகத்தினர் தனி வாகனத்தில் தஞ்சை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பிரபல துணிக்கடைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு பிடித்த ஆடைகளை அவர்களே தேர்வு செய்ய வைத்து வாங்கி கொடுத்து ஆச்சர்யப்படுத்தினர். இதனால் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அடைந்த மகிழ்ச்சி வானில் வர்ண ஜாலம் காட்டும் வானவெடி போல் அமைந்தது.
ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்பில் புத்தாடைகள் என மொத்தம் 1.50 லட்சம் மதிப்பீட்டில் புத்தாடைகள் வழங்கப்பட்டது. இந்த நெகிழ்வான நிகழ்ச்சி குறித்து தூய்மை பணியாளர்கள் கூறுகையில், புத்தாடை வழங்க இருக்கிறார்கள் என்று கூறியவுடன் சாதாரணமாக நினைத்தோம். ஆனால் எங்களை குடும்பம் சகிதமாக தனி வாகனத்தில் அழைத்து வந்து மிகப்பெரிய துணிக்கடையில் எங்களுக்கான ஆடைகள் மற்றும் எங்கள் குடும்பத்தாருக்கும் தேவையான ஆடைகளை நாங்களே தேர்ந்தெடுக்கும் வகையில் ஜோதி அறக்கட்டளை நிர்வாகம் ஏற்பாடு செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.
முன்னதாக தூய்மை பணியாளர்களுக்கு பாரம்பரிய முறைப்படி வெற்றிலை, பாக்கு, சந்தானம், குங்குமம், கல்கண்டு சகிதம் பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது . இதற்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞான சுந்தரி, மேற்பார்வையாளர் கல்யாண சுந்தரம், தன்னார்வலர் ஆர்த்தி மற்றும் பலர் செய்திருந்தனர்.