தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தையே நடுநடுங்க வைத்துள்ளது போலி சித்தவைத்தியரின் வீட்டில் வாலிபரை கொன்று துண்டு துண்டாக புதைத்த சம்பவம். இதன் முழு பின்னணியும், போலி சித்தவைத்தியர் போலீசில் சிக்கிய சம்பவத்தின் முழு தொகுப்பு.


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம், மகாராஜபுரம் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவருடைய மகன் அசோக்ராஜ்(27). திருமணம் ஆகாதவர். சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக அசோக்ராஜ் சொந்த ஊருக்கு வந்துவிட்டு சிதம்பரத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கு சென்று விட்டு சென்னை செல்வதாக தனது பாட்டியிடம் தெரிவித்து விட்டு சென்றவர் காணாமல் போய்விட்டார். அவர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து  சோழபுரம் போலீசில் அசோக்ராஜ் பாட்டி பத்மினி புகார் கொடுத்தார். போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது அந்த பகுதியில் சித்தவைத்தியராக இருக்கும் கேசவமூர்த்தி (47) வீடு உள்ள பகுதிக்கு சென்றதும், திரும்பி வராததும் பதிவாகி இருந்தது. 




தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில்தான் அசோக்ராஜ் ஊருக்கு வந்தபோது சித்தவைத்தியர் கேவசமூர்த்தியிடம் ஆண்மை குறைவுக்காக சிகிச்சை பெற்றதும் தெரியவந்தது. இதற்கு பின்னர் போலீசார் கேசவமூர்த்தி விசாரித்ததில் அசோக்ராஜிடம் தான் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாகவும், அப்போது அவருக்கு ஆண்மைவீரியத்திற்கான மருந்தை கொடுத்ததாகவும், அந்த மருந்தை சாப்பிட்ட பின்னர் அவர் மயங்கி விழுந்தாகவும் இறந்து விட்டதாக நினைத்து உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் புதைத்ததாகவும் கேவசமூர்த்தி தெரிவித்தார்.


இவர் தன்னை சித்தவைத்தியர் என்று கூறிக் கொண்டு இவர் பலருக்கும் வைத்தியம் செய்து வந்துள்ளார். அப்படிதான் இவர் தன்னிடம் சிகிச்கைக்காக வந்த அசோக்ராஜை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீட்டின் பின்புறம் கழிவறையில் புதைத்த சம்பவம்தான் தற்போது தோண்டி எடுக்கப்பட்டு கும்பகோணத்தையே நடுநடுங்கச் செய்துள்ளது.




 
அசோக்ராஜ் காணாமல் போனதாக பதிவான வழக்கு தற்போது கொலை வழக்காக மாறி கைதுசெய்யப்பட்ட கேசவமூர்த்தியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி சித்த வைத்தியரான கேசவமூர்த்தி கொடுத்த தகவலில் அவரது வீட்டில் புல்டோசர் கொண்ட தோண்டியபோது அசோக்ராஜ் உடல் மட்டுமின்றி மற்றொரு மனித தாடை எலும்பும் கிடைக்க பொதுமக்கள் மட்டுமல்ல... போலீசாருக்கும் செம அதிர்ச்சிதான். இதனை மரபணு பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்தநிலையில், அசோக்ராஜை போல் பலரையும் கேசவமூர்த்தி கொன்று புதைத்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதனால்தான் கேசவமூர்த்தி வீட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டினர். சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த சோதனைப்பணியில் 20-க்கும் மேற்பட்ட எலும்புகள் கிடைக்க போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. இது அனைத்து ஒருவருடையதுதானா? அல்லது பலருடையதா என்ற கேள்வியும் எழுந்த நிலையில் போலீசார் அந்த எலும்புகளை ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.




மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேசவமூர்த்தியை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். விசாரணை முடிந்த பின்னர் தான் முழு தகவல்கள் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், அசோக்ராஜின் இறப்பில் மர்ம இருப்பதாவும், உரிய விசாரணை நடத்தி கேசவமூர்த்தி தண்டனை வழங்க வேண்டும் என்று குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், போலீசார் கேசவமூர்த்தியின் வீட்டில் பொக்லைன் எந்திரம் முலம் தோண்டியதில் பல எலும்புகள் கிடைத்துள்ளன. ஏற்கனவே கேசவமூர்த்தியின் வீட்டின் உள்ளே கழிவறை பகுதியில் தான் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அசோக்ராஜ் உடல் எடுக்கப்பட்டது. 


ஆனால் போலீசார் வீட்டிற்கு வெளியே தோண்டியதில் எலும்புகள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக பலரும் இவரால் கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. எனவே கேசவமூர்த்தி வீட்டின் வெளியே சோதனை செய்தது போல் வீட்டின் உள்ளேயும் தோண்டி பார்க்க வேண்டும். அது வீடா? அல்லது சுடுகாடா என்று தெரியாத நிலை உள்ளது. அந்த போலி சித்தவைத்தியரால் வேறு யாரேனும் கொன்று புதைக்கப்பட்டனரா என்றும் போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும். இந்த கொடுரமான சம்பவத்தை செய்த கேவசமூர்த்திக்கு உரிய தண்டனை வழங்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.




போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கேசவமூர்த்தி ஓரினச்சேர்க்கை பழக்கம் உடையவர் என்பதும் இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி குழந்தையின்மையால், இருவரையும் பிரிந்து வாழ்வதும், சென்னையில் கட்டிடப்பணி செய்து வந்த காலத்தில் நாட்டுவைத்தியரிடம் உதவியாளராக பணியாற்றியதில் நாட்டுவைத்தியம் மற்றும் மூலிகைச்செடிகள் பற்றி சில விவரங்கள் தெரிந்து கொண்டு தனது சொந்த ஊரான சோழபுரத்திற்கு வந்து தான் ஒரு நாட்டுவைத்தியர் என்று கூறி, வைத்தியம் பார்த்ததும் தெரியவந்தது. 


குறிப்பாக இளைஞர்களுக்கு போதை மற்றும் பாலுணர்வை தூண்டும் மருள் ஊமத்தை செடியால் தயாரித்த மூலிகைப்பொடியை கொடுத்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.