தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி பகுதியில் சொட்டு நீர் பாசனத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களை பாடியபடியே பெண் தொழிலாளர்கள் கடலை செடியை அறுவடை செய்து வருகின்றனர்.


நிலக்கடலை உற்பத்தி


தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். மேலும் பல விவசாயிகள் கடலை, கரும்பு, எள், பயறு போன்றவையும் சாகுபடி செய்வது வழக்கம். உலக அளவில் எண்ணை வித்துக்கள் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் நிலக்கடலை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு தேவையான எண்ணெய் வித்து பயிர்களை சாகுபடி செய்வது அத்தியாவசியமாகிறது.




கண்டு பூ பூக்கும்... காணாமல் காய் காய்க்கும்


மணிலா அல்லது நிலக்கடலை என அழைக்கப்படும் பயிரானது மிக முக்கியமான எண்ணெய் வித்து பயிராகும். இது பயறு வகை குடும்பத்தை சார்ந்து இருந்தாலும் மற்ற வகை பெயர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. இது கண்டு பூ பூக்கும். காணாமல் காய் காய்க்கும் அதிசய பயிராகும். சமையல் எண்ணெய் உற்பத்தியிலும் கடலை முக்கிய இடத்தை வகிக்கிறது.


உலகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது நிலக்கடலை. இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்சனைகள், புற்று நோய் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும். நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் பிரச்சனை இருக்காது.


நன்மைகள் அளிக்கும் நிலக்கடலை


இதில் உள்ள மாங்கனீஸ் அமிலம், ரத்தத்தில் உள்ள மாவுச்சத்து மற்றும் கொழுப்பு மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை உண்பது நல்லது. இத்தகைய நன்மைகள் அளிக்கும் நிலக்கடலை சாகுபடியை தற்போது விவசாயிகள் அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கோடைக்கால பயிராக தஞ்சை மாவட்டம் சித்திரக்குடி பகுதியில் சொட்டு நீர் பாசனம் மூலம் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு இருந்தது.


நிலக்கடலை செடிகள் அறுவடைப்பணிகள்


தற்போது அந்த நிலக்கடலை செடிகள் அறுவடைப்பணிகள் நடந்து வருகிறது. காலை முதல் மாலை வரை விவசாய பெண் தொழிலாளர்கள் நிலக்கடலை செடிகளை அறுவடை செய்து வருகின்றனர். மதிய வேளையில் களைப்பு தெரியாமல் இருக்க பாட்டு பாடிக் கொண்டே அறுவடை செய்து வருகின்றனர். கடலை செடிகளை காய விட்டு பின்னர் விவசாய பெண் தொழிலாளர்கள் கடலை ஆயும் பணிகள் நடைபெற்று வருகிறது.