தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டத்தில் வெள்ளை அறிக்கை கேட்டும், வரவு, செலவு குறித்த கணக்கு அறிக்கையை கேட்டும் அதிமுக மற்றும் அமமுக, பாஜக கவுன்சிலர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பியடியே வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் தொடங்கியது. துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கிய உடன் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் பாஜக, அமமுக கவுன்சிலர்கள் கருப்பு துணி அணிந்து தனித்தனியாக மாநகராட்சி குப்பைக்கிடங்கில் ஊழல் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி மேயர் சண்.ராமநாதனிடம் மனு அளித்தனர். தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
மேயர்: பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக பெற்ற வெற்றிக்காக முதல்வருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம்.
புண்ணியமூர்த்தி: கடந்த 3 மாதங்களாக எந்த பணிகளும் நடக்கவில்லை. பணிகளை தீவிரப்படுத்தி முடிக்க வேண்டும்.
மேயர்: எந்தெந்த பணிகள் என்று தெரிவித்தால் விரைவுப்படுத்தி விடலாம்.
ரம்யா: அண்ணாநகர், விளார் சாலை 1ம் தெரு நுழைவுப்பாலத்தை விரைவில் கட்டித்தர வேண்டும்.
மணிகண்டன்: நிறைய கோரிக்கைகள் உள்ளது. முக்கியமாக சுகாதாரப்பிரிவில் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் வாகனம் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எத்தனை வாகனங்கள் உள்ளன. அவற்றில் எத்தனை பழுதடைந்துள்ளது. வாகனங்கள் பழுது பார்க்கப்படும் என்று தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை வாகனங்கள் பழுது பார்க்கப்படவில்லை. உரக்கிடங்கு அமைப்பது என்பது பேச்சு அளவில் மட்டும்தான் உள்ளது. துப்புரவு பணிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மேயர்: வாகனங்கள் இயக்கம் குறித்து ஆணையர் விளக்கம் தருவார்.
ஆணையர் மகேஸ்வரி: சிட்டி 2.0 திட்டத்தின் மூலம் ரூ.135 கோடி நம் மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இதனை பயன்படுத்தி புதிய நவீன நடைமுறை வர உள்ளது. அதாவது மாநகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் அன்றைக்கே அழிக்கும் வகையில் எந்திரம் வர உள்ளது. இதனால் உர கிடங்கு தேவைப்படாது.
கண்ணுக்கினியாள்: எனது வார்டு பகுதியில் பூக்கார வடக்கு, தெற்கு, முஸ்லீம் தெரு ஆகியவற்றில் சாலைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டும் இன்னும் பணிகள் நடக்கவில்லை. மேலும் ஜெகன்நாதன் நகர் பகுதியில் பாதாள சாக்கடைகள் சரி செய்யப்பட வேண்டும். துய்மைப்பணியாளர்களுக்கு தேவையான வாகனங்கள் வேண்டும். பழைய பேருந்து நிலையத்தில் நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.
மேயர்: பழைய பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமையும் இதுகுறித்து ஆய்வு செய்யப்படும்.
ஜெய்சதீஷ்: எங்கள் வார்டு பகுதியில் ஒரு தெருவில் பைப் மட்டும் இணைக்க வேண்டும். அதை இணைத்து விட்டால் சாலை அமைத்து விடலாம். மானம்புச்சாவடி விஜய மண்டப தெருவில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அப்பகுதியில் கழிவறை கட்டித்தர வேண்டும். அடிக்கடி பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுகிறது. அதை நீக்க கம்ப்ரஷர் வண்டிகள் வந்தால் ஹோஸ் குழாய் நீளம் போதவில்லை. குறுகலான பகுதிகளில் வண்டி வரமுடியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
கேசவன்: 30வது வார்ட்டில் தூய்மைப்பணி நடைபெறுவதில்லை. வாரத்தில் 4 நாட்கள் பணிக்கு வருவதில்லை. இதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 6 பேர் பணியில் இருக்கின்றனர். இதில் சிலர் விடுமுறை எடுத்தால் அடுத்தவர்கள் பணிக்கு வருவதில்லை. வாகனங்களில் குப்பைகள் நிறைந்து விடுகிறது. அதை கொண்டுபோய் கொட்டி விட்டு வருவதற்கு தாமதம் ஆகிறது என்று தெரிவிக்கின்றனர். எனது வார்டு பகுதியில் 5 சாலைகள் புதிதாக அமைத்து தரவேண்டும். மேலும் நாய் தொல்லை அதிகம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பம்ப்செட் ஆபரேட்டர்களுக்கு சம்பளம் 3 மாதமாக வழங்கப்படவில்லை.
மேயர்: இன்னும் 3 ஆண்டுகள் உள்ளது. அதற்குள் சாலைகள் அமைத்து தரப்படும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்படுகிறது.
காந்திமதி: கொண்டிராஜபாளையம் முதல் கொடிமரத்து மூலை வரை பேவர் பிளாக் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை சரியான முறையில் தரமாக செய்யவில்லை. ஒப்பந்ததாரர் அப்பணிகளை சரியாக மேற்கொள்ளவில்லை.
மேயர்: இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்கப்படும். பணிகள் சரியாக செய்யப்படாமல் இருந்தால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனந்த்: எனது வார்டு பகுதியில் 3 சாலைகள் சரியில்லை. அவை இன்னும் சீரமைக்கப்படாமல் உள்ளது_ குஜிலிகுளம் தூர்வாரும் பணிகள் முழுமையாக நடக்கவில்லை. அதற்கு பில் போடக்கூடாது. மேலும் பழைய பேருந்து நிலைய கடைகளில் வசூல் செய்யப்படும் வாடகை கட்டணத்திற்கு சரியான முறையில் பில் கொடுக்கவில்லை. வாங்கும் தொகைக்கு பில் தர வேண்டும். அல்லது அந்த தொகை எதற்காக வாங்கப்பட்டுள்ளது என்று தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
நீலகண்டன்: கடை, கடையாக சென்று மாநகராட்சி பில் வசூலிப்பவர்கள் உங்கள் கடை வாடகை எவ்வளவு, டெபாசிட் எவ்வளவு, ஏலத் தொகை எவ்வளவுக்கு எடுத்தீர்கள் என்று கேட்கின்றனர். இது எதற்காக கேட்கப்படுகிறது. கடைகளை ஏலம் எடுத்தவர்கள் பணம் கட்டியது எதில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பழைய ஆணையர் மாறுதலில் செல்லும் போது ரூ.30 கோடி வைப்பு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தீர்கள். அந்த தொகை உள்ளதா? அதுகுறித்த விபரம் தேவை.
ஆணையர்; பில் வசூலிப்பவர்கள் தகவலுக்காகதான் வாடகை தொகை உட்பட விபரங்களை சேகரிக்கின்றனர். பழைய ஆணையர் இருந்தபோது ஏலத் தொகை குறித்த சரியான விபரங்கள் இல்லை.
மேயர்: பணம் குறித்த கணக்குகள் உள்ளது. தஞ்சை மாநகராட்சி இந்தியாவிலேயே நம்பர் 1 மாநகராட்சி ஆகும். அதுகுறித்த ஆய்வறிக்கை செய்யப்பட்டுள்ளது.
நீலகண்டன்: எனது வார்டில் அருளானந்த நகரில் பள்ளிக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மாநகராட்சி லே அவுட் போடப்பட்டுள்ளது. அது குறித்தும் விபரங்கள் வேண்டும். புதிதாக லே அவுட் வைத்திருப்பதின் காரணம் என்ன என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.
உஷா : 39-வது வார்டில் பாலம் சீரமைக்கப்படும் என கூறி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை பணி முடியவில்லை
மணிகண்டன்: தஞ்சை மாநகராட்சி கடன் இல்லாத மாநகராட்சி என அறிவித்து விட்டு தற்போது கடன் சுமையால் உள்ளதாக தகவல்கள் வருகிறது. இதற்கு வெள்ளை அறிக்கை விட வேண்டும். மேலும் மாநகரகாட்சியில் தணிக்கை குழுவினர் தணிக்கை செய்த ஆவண விவரங்களை காண்பிக்க வேண்டும்.
ஆணையர் மகேஸ்வரி : தணிக்கை செய்யப்பட்ட ஆவண விவரங்களை அடுத்த மாத கூட்டத்தில் அனைவர் முன்னிலையில் காண்பிக்கப்படும்.
மணிகண்டன் : அப்படி கிடையாது. இந்த கூட்டத்திலேயே காண்பிக்க வேண்டும். மாநகராட்சியில் வரவு செலவு எவ்வள நடந்துள்ளது. கடன் எவ்வளவு என்பது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்.
தொடர்ந்து மேயர் ஜெயலலிதாவின் பெயரை கூறியதால் அதிமுக கவுன்சிலர்கள் ஒன்றாக திரண்டு கோஷம் எழுப்பினர். அப்போது மணிகண்டன் மரியாதையாக பேசவேண்டும். முன்னாள் முதல்வரை மரியாதை இல்லாமல் பேசுவியா என்று ஒருமையில் மேயரை பார்த்து பேசினார். இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்கள் மத்தியில் வாக்குவாதம் எழுந்தது. இரு தரப்பினரும் காரசாரமாக திட்டிக் கொண்டனர். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் ஹைசாகனி எழுந்து திமுக கவுன்சிலர்களுக்கு ஆதரவாக பேசினார். அவரிடமும் அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பியபடியே அதிமுக கவுன்சிலர்கள் மணிகண்டன், தட்சிணாமூர்த்தி, சரவணன், கோபால், கேசவன், கமலவாணி, காந்திமதி மற்றும் பாஜக கவுன்சிலர் ஜெய்சதிஷ், அமமுக கவுன்சிலர் கண்ணுக்கினியாள் ஆகியோர் மாநகராட்சி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
மேயர்: இந்தியாவிலேயே நம்பர் 1 மாநகராட்சி தஞ்சாவூர் மாநகராட்சி தான். ஆதாரமற்ற தகவல்களை மன்றத்தில் கவுன்சிலர்கள் பேச கூடாது. ஆவணங்களை அடுத்த கூட்டத்தில் ஆணையர் சமர்பிக்கிறார் என கூறியும் அதனை எதிர்கட்சி கவுன்சிலர்கள் ஏற்கவில்லை. தஞ்சை மாநகராட்சி என்றுமே நம்பர் 1 தான் என்பதை எப்போதுமே உறுதிப்பட என்னால் கூற முடியும். கூட்டத்தில் கவுன்சிலர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.