தஞ்சாவூர்: கும்பகோணத்தில் வழிப்பறி வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மகனை விடுவிக்க கோரி, போலீஸ் ஸ்டேஷன் முன்பு, தந்தை மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் செக்காங்கன்னி பகுதியை சேர்ந்தவர் ஜான்பென்னி,49,. ஆட்டோ டிரைவர்.
இவருடைய மகன் பிரவீன் குமார்,22,  இவர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து கடந்த மாதம் 11ம் தேதி விடுவிக்கப்பட்டார்.  


இந்நிலையில், கும்பகோணம் மேற்கு போலீசில், மொபைல் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில்  பிரவீன்குமார் அவரது கூட்டாளிகளான ஹரி பாலாஜி, சூர்யா, அருண், ஆகாஷ் உள்ளிட்டோரை நேற்று கைது செய்து போலீஸ் ஸ்டேஷனில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் தயார்படுத்திக்கொண்டு இருந்தனர்.

அப்போது மாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ஜான்பென்னி, தனது மகன் பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறியும், தனது மகனை பார்க்கவேண்டும் என போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார்
பிரவீன்குமார் விசாரணையில் இருப்பதால் பார்க்க முடியாது என மறுத்துள்ளனர்.

பின்னர் சத்தம் போட்டுக்கொண்டு இருந்த ஜான்பென்னி, திடீரென போலீஸ் ஸ்டேஷன் வாசலில் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த, மண்ணெண்ணெய்யை உடல் மீது ஊற்றி தீயை பற்ற வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதில் உடல் முழுவதும் தீ பரவி, படுகாயமடைந்தார்.

வலியால் துடித்த அவரை போலீசார், மீட்டு கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது, சிகிச்சையில் இருந்த ஜான்பென்னியை கும்பகோணம் ஜே.எம்.1 நீதிபதி இளவரசி, மருத்துவமனைக்கு சென்று, ஜான்பென்னியிடம் வாக்குமூலம் பெற்றார்.

அப்போது, ஜான்பென்னிக்கு 87 சதவீதம் தீக்காயம் உள்ளதால், மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)