தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி சரஸ்வதி நகரில் பள்ளிக்கூடத்திற்காக ஒதுக்கப்பட்ட பொது இடத்தில் சில குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் தஞ்சை கலெக்டரிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது, மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அந்த வகையில் தஞ்சாவூர் அருகே மானோஜிபட்டி சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் அருகே மானோஜிபட்டியில் அமைந்துள்ளது சரஸ்வதி நகர். இங்கு பள்ளி கூடம் அமைப்பதற்காக அரசு சார்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை சில குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதே போல் இப்பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. தற்போது தனியார் இடத்தில் இயங்கி வருகிறது. உடனடியாக புதிய கட்டிடம் பணிகளை தொடங்குமாறு அறிவுருத்த வேண்டுமாறும் பள்ளிக் கூடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு அங்கு மக்கள் பொது பயன்பாட்டு கட்டிடம் அமைக்கலாம்.
எனவே பள்ளிக்கூடத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளப் பெரம்பூர் பகுதியில் விலை நிலங்களை சேதப்படுத்தி வரும் பன்றிகளை வனத்துறைகளை கொண்டு பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி விவசாயி ஒருவர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவருக்கு சொந்தமாக கள்ளப்பெரம்பூர் முதல் சேத்தி மற்றும் இரண்டாம் சேத்தி பகுதியில் விளைநிலங்கள் உள்ளது. அங்கு நெல் நாற்றுகள் அனைத்தும் கதிர் விடும் பருவத்தில் உள்ளது. இந்நிலையில் அங்கு சுற்றி தெரியும் காட்டுப்பன்றிகள் வயல்களில் இறங்கி நெல் நாற்றுகளை நாசம் செய்கிறது. எனவே இது குறித்து வனத்துறையினரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நெல் நாற்றுகள் அனைத்தும் வீணாகும் நிலையில் உள்ளது. எனவே காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் மூலம் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பின்னையூர் பகுதியை சேர்ந்தவர் ராசு (74) என்பவர் கொடுத்த மனுவில், எனக்கு நான்கு மகன்கள் உள்ளனர். நான்கு மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. என் மகன்கள் என்னையும். எனது மனைவியையும் அடிந்து துன்புறுத்தி எந்த விதமான உதவியும் செய்வதில்லை.
மேலும் எனக்கு 7 ஏக்கர் நிலம், 3 மீன் குட்டைகள், 250 தென்னை மரம் 2 மாடி வீடு ஆகிய சொத்துக்கள் எனது பெயரில் உள்ளது. எனது சொத்துக்கான ஆவணங்கள் (பந்திரம்) அனைத்தையும் எனது மகன் ஆசைதம்பி மனைவி அனிதா, சரவணன் இருவரும் பெற்று கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் சரவணன் மனைவி அனிதா நாங்கள் கட்டிய வீட்டில் எங்களை குடியிருக்க விடாமலும், உணவு கொடுக்காமலும் என்னையும் எனது மனைவியுைம் அடித்து தகாத வார்த்தையால் திட்டி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்.
எனவே கருணையுள்ளம் கொண்ட மாவட்ட கலெக்டர் எனது பெரிய மகனிடமிருந்து சொத்து ஆவணங்களை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு சொத்து ஆவணங்களை மீட்டு தந்தால் 4 மகன்களுக்கு பாகம் பிரிக்க உதவியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.