தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி முழுவதும் புதிய சாலையை பெயர்த்து பாதாள சாக்கடை மூடிக்காக பள்ளங்கள் தோண்டப்படுவதால் வாகன ஓட்டுனர்கள் அவதியடைந்துள்ளனர்.


கும்பகோணத்தில் உள்ள ஏராளமான கோயில்கள்


தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் என 2 மாநகராட்சிகள் உள்ளன. இவற்றில் கும்பகோணம் மாநகரமானது காவிரி, அரசலாறு என்ற 2 ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது. கும்பகோணத்தில் ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன. கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன.  80 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு  உள்ளன. கும்பகோணத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலையான இந்த சாலை சேதமடைந்து காணப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.


பல கோடி ரூபாய் செலவில் புதிய தார் சாலை அமைப்பு


இந்நிலையில் கும்பகோணத்தில் பல கோடி ரூபாய் செலவில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடந்தது. இப்பணியின் போது ஏற்கனவே போடப்பட்டிருந்த சாலைக்கு மேல் புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டது. இதனால் பலவேறு இடங்களில் சாலைகள் உயர்ந்து விட்டது. இதன்காரணமாக பெரும்பாலான வணிக வளாகங்கள் பள்ளத்தில் இருப்பது போல் மாறியது. இதற்கிடையில் மாநகராட்சி முழுவதும் சாலை அமைக்கும் பணிகள் முடிவு பெற்று சாலை நடுவே வெள்ளை கோடுகள் வரையப்பட்டுள்ளன.




புதிய சாலையில் பாதாள சாக்கடைப்பணிகள்


தேவைப்படும் இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இரவு நேரங்களில் ஒளிரும் ரிப்ளக்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாநகராட்சி சார்பில் கும்பகோணம் நால்ரோடு பகுதியில் இருந்து செட்டிமண்டபம் செல்லும் சாலை, டைமண்ட் இறக்கம் முதல் பாலக்கரை வரை உள்ள சாலை உள்பட மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பாதாள சாக்கடை பணிகள் நடக்கிறது.


மேடு போல் காணப்படும் சாலைகள்


பணிகள் முடிந்த பின்னர் சாலையை சரிவர மூடாமல் சென்று விடுகின்றனர். இதனால் பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் சாலை மேடு போல் காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக இருச்சக்கர வாகனஓட்டுனர்கள் சிறு சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனா். எனவே மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை பணிகள் முடிந்தவுடன் சாலையை முறையாக மூட வேண்டும்என்று வாகனஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,  கும்பகோணம் மாநகராட்சி முழுவதும் புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் போதே பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டிகளின் மூடியுடன் சோ்த்து மூடி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் சரிசெய்ய சிரமம் ஏற்படுகிறது. இதன்காரணமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டிக்கான மூடிகளை சாலை மட்டத்திற்கு உயர்த்தி அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது என்றனர்.


கும்பகோணம் மாநகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தார்ச்சாலைகள் போடப்பட்டது. இந்த சாலைகள் அனைத்தும் பழைய சாலைகளை அப்புறப்படுத்தாமல் போடப்பட்டதால் பாதாள சாக்கடை ஆழ்நுழைவு தொட்டியின் மூடி மறைக்கப்பட்டு விட்டது. இதனால் புதிய தார்ச்சாலை அமைத்த சில நாட்களில் பள்ளம் தோண்டி விட்டனர். இதனால் தோண்டப்பட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து சாலை பெயர்ந்து வர வாய்ப்பு உள்ளது. எனவே பாதாளசாக்கடை பணிகளை முடித்து சாலையை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.