தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் சமுதாய தோட்ட விழா நடந்தது. விழாவை ஒட்டி 100 பயன்தரும் மரக்கன்றுகளும், காய்கறி தோட்டமும் அமைக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 561 பேரூராட்சிகளில் 10 பேரூராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு அதில் சமுதாய தோட்டம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த 10 பேரூராட்சிகளில் தஞ்சை அருகே உள்ள வல்லம் பேரூராட்சியும் ஒன்று.
வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது. மிக முக்கியமான பகுதியாக வல்லம் உள்ளது. இப்பகுதியை சுற்றி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என நிறைந்து உள்ளன. எப்போதும் போக்குவரத்து நிறைந்த இந்த இப்பேரூராட்சியில் 4743 குடியிருப்பு வீடுகளும் 480 வணிக கட்டிடங்களும் உள்ளது. இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் வார்டு 12ல் அமைந்துள்ள அய்யனார் நகர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இங்கு அமைந்துள்ளதுதான் வளம் மீட்பு பூங்கா. 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளம் மீட்பு பூங்கா கடந்த 2006ம் ஆண்டு அமைக்கப்பட்டது. சிறந்த செயல்பாட்டால் விருதும் பெற்றது.
அன்றிலிருந்து இன்று வரை குப்பைகள் சேகரிக்கும் கிடங்கு என்று யார் இதை கூறினாலும் நம்ப முடியாத அளவிற்கு அருமையான செயல்பாட்டை கொண்டு விளங்கி வருகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவில் தேக்கு, மூங்கில், கொய்யா, பலா, வாழை மரங்கள் இயற்கை உரம் தெளிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. காய்கறி செடிகளும் உள்ளன. இந்த வளம் மீட்பு பூங்காவில் சமுதாய தோட்டம் அமைக்கும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு டாக்டர் ராதிகா மைக்கேல் தலைமை வகித்தார். ஒன்றிய துணை பெருந்தலைவர் அருளானந்தசாமி, பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் கணேசன் வரவேற்று பேசினார். இதில் டாக்டர் பர்வீன், திமுக நகர செயலாளர் கல்யாண சுந்தரம், மருதுபாண்டியர் கல்லூரி நிறுவனர் மருதுபாண்டியன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியர் கீர்த்திவாசன், வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஒட்டி வளம் மீட்பு பூங்காவில் பயன்தரும் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் கத்திரிக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி மற்றும் பல காய்கறி விதைகள் நட்டு காய்கறித் தோட்டமும் அமைக்கப்பட்டது.
விழாவில் வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கனிமொழி மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு பாடலை பாடினார். மேலும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், வீதி நாடகம், கோலாட்டம், நாட்டுப்புற நடனம், விளம்பர நடிப்பு, மேற்கத்திய நாடகம், மெல்லிசை ஆகியவை நடந்தது.
மேலும் அடைக்கல மாதா கல்லூரி மாணவிகளின் சிறப்பு நிகழ்ச்சி, வல்லம் செல்வி கிராமிய கலைக்குழுவினரின் நாட்டுப்புற நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு பேரூராட்சி சார்பில் மூலிகை தேநீர் வழங்கப்பட்டது. சமுதாய தோட்ட பராமரிப்புக்காக டாக்டர் ராதிகா மைக்கேல் தலைவராகவும், செயலாளராக டேவிட் ராஜா மற்றும் அருண் பாலாஜி உட்பட 45 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த குழுவினருடன் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.