தஞ்சாவூர்: பெண்களை விதவையாக மாற்றும் டாஸ்மாக் கடை மற்றும் பாரை மூட வேண்டும் என பெண்கள் தாலி கயிறுடன், கலெக்டர் அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புளியக்குடியில் டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் விபத்துகளும், உயிரிழப்புகளும்,. ஏற்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது என்று அப்பகுதி பெண்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவ்வழியாக செல்லும் பெண்களையும், கல்லுாரி மாணவிகளையும் கேலி, கிண்டல் செய்வதால், பலரும் அச்சப்பட்டுக் கொண்டே செல்கின்றனர்.  தொடர்ந்து விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளாலும், மதுவுக்கு அடிமையாகி பலரும் இறப்பதால், இளம் பெண்கள் விதவைகள் உருவாகி வரும் சூழல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதியினர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், உடனடியாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும். என்ற கோரிக்கையை முன் வைத்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பாக மாவட்ட தலைவர் தாமரைச்செல்வி தலைமையில், கையில் மஞ்சள் தாலி கயிறுகளை கையில் ஏந்தி, கலெக்டர் அலுவலகத்தில்  நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கலெக்டர் தீபக் ஜேக்கப்பிடம் நேரடியாக டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூலி தொழிலாளி குடும்ப பிரச்னை காரணமாக தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்துக்கு உள்பட்ட விஸ்வநாதபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மேகராஜ் (32). கூலி தொழிலாளி. இவரது மனைவி குடும்ப பிரச்னை காரணமாக கோபித்துக் கொண்டு குழந்தையுடன் தந்தை வீட்டுக்குச் சென்று விட்டாராம். மனைவியை சமாதானம் செய்வதற்காக மேகராஜ் அண்மையில் அவரது வீட்டுக்குச் சென்றார்.

அங்கு மேகராஜை மனைவியின் பெற்றோர், உறவினர்கள் அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் மேகராஜ் புகார் செய்தார். இவரது புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் இவரை காவல் துறையினர் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மேகராஜ் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து மேகராஜை மீட்டு மேகராஜ் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை, தமிழ் பல்கலைக்கழகக் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.