தஞ்சாவூர்: மேகதாட்டு அணைக்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.


நகல் எரிப்பு போராட்டம்


மேகதாட்டு ஆணை கட்டுவதற்கு ஆதரவாக காவிரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி நடந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.


கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள்


செயலாளர் பாட்ஷா ரவி, இளைஞர் அணி மாநில செயலாளர் மகேஸ்வரன், தஞ்சை மாநகர செயலாளர் அறிவு, புதுக்கோட்டை மாவட்ட செயலர் பத்மநாபன், சங்க கௌரவ தலைவர் திருப்பதி வாண்டையார் மற்றும் பல கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மேகதாட்டு அணை கட்டுமான திட்டத்துக்கு கர்நாடகாவிற்கு ஆதரவான தீர்மானத்தை கைவிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும்  காவிரி ஆணையத்தை கண்டிக்கிறோம். நடுவர் மன்ற தீர்ப்பை குழி தோண்டி புதைக்கும் காவிரி ஆணையத்தை கண்டிக்கிறோம். சட்ட விரோத மேகதாட்டு அணை கட்டுமான தீர்மானத்தை கைவிடு. மேகதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. 




காவிரியில் பெற்ற உரிமைகள் பறிபோகிறது


பின்னர் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரியில் பெற்ற உரிமைகள் பறிபோகிறது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்து விட்டு, காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த பிப்.1ம் தேதி ஆணைய கூட்டத்தில் கா்நாடகாவிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக அரசு இதை தடுத்து நிறுத்த முன்வரவில்லை. 


நிலங்கள் பாலைவனமாக மாறும் பேராபத்து


தமிழக முதல்வர் உடன் தலையிட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழகத்தின் பிரதிநிதியாக உள்ள தமிழக அரசின் நீர்வளத்துறை முதன்மை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா இந்த பொறுப்புக்கு தகுதியற்றவர். தமிழக அரசின் சார்பில் சந்தீப் சக்சேனா அலட்சியமாக செயல்படுவதால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். 5 கோடி மக்களின் வாழ்வாதாரம், சுமார் 22 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாலைவனமாக மாறிக்கூடிய போராபத்து உள்ளது.     


விவசாயிகள் சார்பில் கூட்டம்


காவிரியில் மட்டுமல்ல, அமராவதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணைக்கட்டி வருகிறது. 2015ம் ஆண்டு சிறுவாணியில் அணை கட்டுவதை தடுத்து வைத்து இருந்தோம். ஆனால் அணைக் கட்டப்பட்டுள்ளது. பாலாற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் நீர் ஆதார உரிமை பறிபோகிறது. இதை கண்டித்து அனைத்து வரும் 25ம் தேதி கோவையில் அனைத்து விவசாய சங்கம் சார்பில் கூட்டம் நடைபெற உள்ளது. 


கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் பழனிசாமி அரசு முல்லைபெரியார் அணையை தவிர்த்து கேரளா, தமிழகத்திற்கான நீர் ஆதார பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ள சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மூன்று கட்ட பேச்சுவார்த்தையை நடத்தினார். தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அந்த குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரை கூட்டம் நடத்தப்பட்டவில்லை. எனவே, தமிழகத்தின் நீர் ஆதாரம் பறிபோவதற்கு காரணம் தி.மு.க., அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.