தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் 7 லட்சம் வீடுகளில் கால்நடைகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.


இந்தியாவில் முதல் கால்நடை கணக்கெடுப்பு 1919-1920 இல் மேற்கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.


கணக்கெடுப்பின் போது, பல்வேறு வகையான விலங்குகள் (கால்நடை, எருமை, செம்மறி ஆடு, பன்றி, குதிரை, நாய், யானை போன்றவை) மற்றும் பறவைகள் (கோழி, வாத்து, பிற கோழிப் பறவைகள் போன்றவை) வீடுகள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் தளத்தில் கணக்கிடப்பட்டது. பொதுவாக கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களுக்கு தனித்தனியாக வழங்கப்படுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட தரவு, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடைத் துறையின் பல்வேறு திட்டங்களைத் திட்டமிடுவதற்கும் உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் புள்ளிவிவர நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியாவில் கால்நடைகள்  கணக்கெடுப்பு பணி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இதுவரை 20 முறை கால்நடை கணக்கெடுப்பு பணி நடைபெற்றுள்ளன. தற்போது 21வது முறை கால்நடை கணக்கெடுப்பு பணி அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பு பணியை தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் தொடங்கி வைத்தார். 


பின்னர் அவர் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் 21வது முறை கால்நடை கணக்கெடுப்பு பணி நடைபெற்று. வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 2 ஆயிரத்து 825 வீடுகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இதற்கென தனி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 169 கணக்கெடுப்பாளர்கள், 36 மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி வழங்கப்பட்டு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


எனவே கால்நடை கணக்கெடுப்பாளர்கள் தங்கள் பகுதியில் விபரங்கள் சேகரிக்க வரும் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து உரிய விபரங்களை தெரிவித்து கால்நடை கணக்கெடுப்பு பணி துல்லியமாக நடைபெற உதவ வேண்டும். எதிர் காலத்தில் கால்நடைகள் வளம் மற்றும் நலத்துடன் மனிதர்களுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் திட்டமிடவும் தஞ்சை மாவட்டத்தில் ஒவ்வொரு வரும் தேவையான தரவுகளை அளித்திடவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 


நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை தஞ்சை மண்டல இணை இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன், துணை இயக்குனர் டாக்டர் சுப்பையன், உதவி இயக்குனர் டாக்டர் சரவணன், கால்நடை உதவி டாக்டர்கள் தினேஷ், ஆல்வின், வேல்முருகன், செரீப் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.