தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இதில் 33 இன வகை பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பல்கலைக்கழகம் என்பது தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1981, செப்டம்பர் 15ம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு போன்றவற்றின் முதன்மையான உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது இப்பல்கலைக்கழகம் என்றால் மிகையில்லை.

பழங்கலை வடிவங்களை அவற்றின் மரபு, சுய அமைப்பு, தூய்மை கெடாது பாதுகாத்தல், புது உத்திகள் கண்டு அவற்றின் வளர்ச்சிக்கு உதவுதல் போன்ற விரிவான அடிப்படை நோக்கம் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் தொடங்கப்பட்டு தற்போது சிற்பம், இசை, நாடகம் ஆகிய மூன்று துறைகள் செயல்பட்டு வருகின்றன. அவை சிற்பத்துறை, இசைத்துறை, நாடகத்துறை ஆகியவை ஆகும்.

தமிழ்ப் பணிக்கு அடிப்படையாக அமையும் ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள், கல்வெட்டுச் சான்றுகள் முதலியவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்துப் பாதுகாத்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய நோக்கம் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் செயல்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைகழகம் வளாகம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவு கொண்டது. இங்கு நூற்றுக்கணக்கான பறவைகள் இனம் இருப்பதாக பல்கலைக்கழகம் சார்பில் ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.





இந்நிலையில் வனத்துறை வனவர் இளஞ்செழியன், வனக்காவலர் பூபதி, அருங்கானுாயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஸ்குமார் குழுவினர், விதையால் ஆயுதம் செய் அமைப்பை சேர்ந்த நடராஜன், அமர்நாத், பொய்யாமொழி, சுற்றுச்சூழல் அமைப்புகள், பறவையியல் வல்லுனர்கள், மாணவர்கள் என ஐம்பதுக்கும் அதிகமானோர் வளாகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.  

குழுவிற்கு 10 பேர் வீதம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு தனித்தனி பல்கலைக்கழக வளாகத்தில், நடைபயணம் மேற்கொண்டு பறவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.  இதில், 33 இன வகைளில், 527 எண்ணிக்கையிலான பறவைகள் இருப்பதாகவும், ஒரு சில நீர்ப்பறவைகள், தரைவாழ் பறவைகள் அதிகம் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

அத்துடன் பறவைகள் கணக்கெடுப்பு தொடர்பாக குத்தவை நாச்சியார் கல்லுாரி பேராசிரியர் சுகுமார், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி செல்வம் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். முன்னதாக பயிற்சி வகுப்பை தமிழ்ப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் முருகன், தோட்டப் பிரிவு அலுவலர் சுவாமிநாதன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இந்த கணக்கெடுப்பு பணியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இதுகுறித்து அருங்கானுாயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார் கூறியதாவது: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வகையான மரங்கள் இருப்பதால், பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்கலைகழக துணை வேந்தர் ஒத்துழைப்புடன் கணக்கெடுப்பு செய்தோம். வளாகத்தில் நீலமுக செண்பகம், சுடலை குயில்,தேன் பருந்து, ஆசிய பச்சை தேன் உண்ணி என ஏராளமான பறவைகள் உள்ளன.பல்கலைகழகத்தில் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதத்தில் அதிகளவில் பறவைகள் வருகின்றன. இங்குள்ள பறவைகள் இனம் அழியாமல் பாதுகாக்க பல்கலைக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.