தஞ்சாவூர்: கடந்த 30 ஆண்டுகளாக மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைத்து நீர்மோர் மற்றும் பானகம், தண்ணீர் ஆகியவற்றை வழங்கி வருகிறார் தஞ்சையை சேர்ந்த ஒப்பந்தக்காரர் பாரதி மோகனை மக்கள் மனதார பாராட்டி சென்றனர்.


கோடை வெயில் மக்களை வறுத்தெடுக்கிறது. குடிநீர் தேடி அலையும் மக்கள் தாகம் தணிப்பதற்காக மிக பழங்காலம் தொட்டே தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர் பந்தல்கள் நம் வாழ்வியலுடனும், வரலாற்றுடனும் இணைந்தே வருகிறது. 


இலக்கியங்களில் தண்ணீர் பந்தல் குறித்த தகவல்


பழந்தமிழர்களின் வாழ்வியலை ஆராய்ந்தால், கோடைக்கு தண்ணீர் பந்தல் அமைத்த செய்திகள் பழந்தமிழ் இலக்கியங்களிலும், பெரும்பாலான கல்வெட்டுகளிலும் நிறைய உள்ளன. அதாவது, 'நீர் அறம் நன்று' என, சிறுபஞ்சமூலமும், 'நிறைந்த பந்தற்ற சும்பவார் நீரும்' என, மணிமேகலையில், காஞ்சிபுரத் தண்ணீர் பந்தல் பற்றியும், உடல் சூட்டைத் தணிக்கும் சந்தனமும், பூவும் கலந்து, தண்ணீர் வினியோகித்த செய்தியை, சீவக சிந்தாமணியும் குறிப்பிடுகின்றன. தண்ணீர் பந்தல் அமைத்து, தினமும் பலரின் தாகம் தீர்த்த அப்பூதியடிகள் பற்றி பெரியபுராணம் புகழ்கிறது. அடியார்கள் மட்டும் தான் தண்ணீர் பந்தல் அமைத்தனரா என்றால் அது தான் இல்லை.


தண்ணீர் பந்தல் அமைப்பது அறச்செயல்


மன்னர்கள் தான் தண்ணீர் பந்தல் அமைப்பதை அறச்செயலாகக் கருதி தொடர்ந்து செய்து, தங்களின் குடிமக்களையும் அதை செய்ய வலியுறுத்தினர். மக்கள் நடந்து செல்லும் பெருவழிகளிலும், கோவில் மண்டபங்களிலும் நிரந்தரமாக தண்ணீர் பந்தல்களை அமைப்பதில், மன்னர்கள் ஆர்வம் காட்டினர். உத்திரமேரூர், காஞ்சிபுரம் அருகில் உள்ள உக்கல், திருச்செந்துறை, திருப்பராய்த்துறை, செந்தலை போன்ற பல ஊர்க் கோவில்களில், அம்பலம் என, அழைக்கப்படும் மண்டபங்களில், தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்துள்ளது. இதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. 


தண்ணீர் பந்தல் பற்று


இந்த தண்ணீர் பந்தல்களை அமைக்கவும், பராமரிக்கவும், 'தண்ணீர்ப் பந்தல் பற்று' என்னும் பெயரில், நிலதானம் அளித்ததை, திருவேள்விக்குடி மணவாளேசுவரர் கோவிலில் உள்ள விக்கிரம சோழன் கல்வெட்டு வாயிலாக அறிய முடிகிறது. திருச்சிக்கு அருகில் உள்ள சோழமாதேவி கிராமத்தின், கைலாயமுடையார் கோவிலில் காணும் ராஜராஜ சோழன் கல்வெட்டில், 'ராஜராஜன்' என்று அழைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் மண்டபத்தில் தான், அவ்வூர் சபையார் கூடி முக்கிய முடிவுகளை எடுத்ததை அறிய முடிகிறது.


கல்வெட்டுக்கள் தெரிவிக்கும் செய்திகள்


கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள, அகத்தீசுவரம் கோவில் கல்வெட்டில், தண்ணீர் பந்தல் முதலாம் ராஜராஜ சோழன் பெயரால், ஜெயங்கொண்ட சோழன் எனப் பெயரிட்டு அழைக்கப்ப்பட்டதை அறிய முடிகிறது உத்திரமேரூரில், 'பிரமாணி மண்டபம்' என, ஒரு மண்டபம் இருந்தது. நாகநந்தி என்பவரிடம் ஊர் சபையார், 25 கழஞ்சு பொன் பெற்றுக் கொண்டு, அதிலிருந்து வரும் வருவாயின் வாயிலாக, பங்குனி உத்திரம் முதல் கார்த்திகை மாதம் கார்த்திகை வரை, மண்டபத்தின் முன் தண்ணீர் பந்தல் நடத்த வேண்டும் என்றும், அதை ஊர் பெரியவர்கள் கண்காணித்து வந்தனர் என்றும் ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
தஞ்சையில் நீர்மோர் பந்தல்


இப்படி ஆதிகாலம் தொட்டே தண்ணீர் பந்தல் அமைப்பது என்பது இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 30 ஆண்டுகளாக தஞ்சையை சேர்ந்த ஒப்பந்தக்காரர் பாரதி மோகன் (48) என்பவர் தஞ்சை புதுபஸ்ஸ்டாண்ட் அருகே மெயின் ரோடு பகுதியில் தனது சொந்த செலவில் தண்ணீர் பந்தல் அமைத்துள்ளார்.


கோடைகாலம் தொடங்கும் போதே இந்த தண்ணீர் பந்தலை அமைத்து தினமும் நீர்மோர், பானகம் போன்றவற்றையும் வழங்கி வருகிறார். இந்தாண்டு தனது மகன் பாவேஷ் மோகன் 9ம் ஆண்டு பிறந்த நாளை ஒட்டி தண்ணீர் பந்தலை அமைத்து காலை முதல் மாலை வரை நீர் மோர், பானகம் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வழங்கினார். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டும், வாழ்த்தும் குவிந்தது.


மக்கள் தாகம் தீர்க்கும் பணி


இதுகுறித்து பாரதிமோகன் கூறுகையில், "கோயில் திருவிழாவின் போது நீர்மோர் பந்தல் அமைத்தது. அப்படியே பல ஆண்டுகாலமாக தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன். தஞ்சை புதிய பஸ்ஸ்டாண்டை சுற்றி பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் அதிகம் உள்ளது. இங்கு வரும் மக்கள் தண்ணீருக்காக தவிக்கின்றனர். முக்கியமாக கல்லூரியில் அட்மிஷன் நேரத்தில் மக்கள் வெகுநேரம் காத்திருக்கும் நிலையில் அவர்கள் தாகம் தீர்க்க தண்ணீர், நீர்மோர் மற்றும் பானகம் ஆகியவற்றை தண்ணீர் பந்தல் அமைத்து காலை முதல் மாலை வரை வழங்கி வருகிறோம். இதற்கு எனது மனைவி ஜெயசுதா மற்றும் குடும்பத்தினர் சிறந்த ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். சுத்தமான குடிநீர் தினமும் சுமார் 600 லிட்டர் வரை வழங்கப்படுகிறது" என்றார்.