தஞ்சாவூர்: கத்திரி வெயில் ஒரு பக்கம் வாட்டி எடுத்து வருகிறது; மறுபக்கம் தஞ்சை நகர் பகுதியில் சாரல் மற்றும் தூறல் மழைதான் பெய்கிறது. ஆனால் சுற்றியுள்ள கிராமங்களில் நல்ல மழை வெப்பம் தணிந்து குளிர்காற்று வீசியது. இருப்பினும் தஞ்சாவூர் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்துள்ளதால் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் 1 கிலோ மாதுளை ரூ.100க்கு விற்ற நிலையில் தற்போது ரூ. 250க்கு விற்பனையாகிறது.
இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்து விட்டது. கோடை வெயில் இந்த ஆண்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது. பிப்ரவரி இறுதியில் தனது வெப்ப முகத்தை காட்டத்தொடங்கிய வெயில்.. ஏப்ரல் முழுவதும் உக்கிரமாக இருந்தது. இதனால், மக்கள் கடும் அவஸ்தைக்கு உள்ளாகினர். அதிலும் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதெல்லாம் டீசர், டிரெய்லர்தான்... வறுத்தெடுக்கும் கத்திரி வெயில்
இதெல்லாம் சும்மா டீசர், டிரெய்லர் போலதான் என்று கடந்த 4ம் தேதி தொடங்கியது அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில், சுட்டெரித்த வெயிலை கண்டு வெளியில் வரவே தஞ்சை மக்கள் அச்சப்பட்டனர். சாலைகளில் கானல் நீர் பளிச்சென்று மின்னியது. அந்தளவிற்கு மெயின் பிக்சர் ஆன கத்திரி வெயில் மக்களை வறுத்தது.
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே யோசிக்கும் அளவுக்கு வெப்பம் தகிக்கிறது. நீர் ஆகாரங்கள் அதிகம் உட்கொண்டு வெயிலின் தாக்கத்தை சமாளித்து வருகிறார்கள். முக்கியமாக பழ ஜூஸ்கள் கடைகளை தேடி, நாடிப் போய் மக்கள் குவிந்தனர். கரும்பு ஜூஸ், அன்னாசி, மாதுளை, திராட்சை, தர்பூசணி, கிர்ணி பழம் என்று வெப்பத்தை சமாளிக்க பழங்களுடன் மக்கள் கரங்கள் கோர்த்தனர். இதில் தஞ்சை மார்க்கெட்டிற்கு ஆரம்பத்தில் பழங்களின் வரத்து அதிகம் இருந்தது. முக்கியமாக ஆரோக்கியத்தையும், வெப்பத்தை தணிக்க உதவும் தர்பூசணி மற்றும் மாதுளை விலை குறைவாக இருந்தது.
வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது
தஞ்சாவூருக்கு ஆப்பிள், மாதுளை, அன்னாசி போன்ற பழங்கள் டெல்லி, மராட்டியம், கர்நாடகா, கேரளா, நாக்பூர் இருந்து கொண்டு வரப்படுகிறது. மேலும் நீடாமங்கலம், மன்னார்குடி, ஒரத்தநாடு, திருவையாறு, பட்டுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சாவூரில் கடந்த சில நாட்களாக வரத்து குறைந்து ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட அனைத்து பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, அன்னாசி உள்ளிட்டவற்றை வாங்கி பழச்சாறு செய்து குடித்து வருகின்றனர். வரத்து குறைவினால் மொத்த பழக்கடைகளில் 10 கிலோ கொண்ட ஒருபெட்டி காஷ்மீர் ஆப்பிள் ரூ. 1400க்கு விற்றது. தற்போது ரூ. 1600க்கும், ரூ. 1600க்கு விற்ற துருக்கி ஆப்பிள் ரூ. 1800க்கும் என அனைத்து ரக ஆப்பிள்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இதனால் சில்லறை கடைகளில் அதன் விலை ரகம் வாரியாக கிலோ ரூ. 300 வரை விற்கப்படுகிறது. இதே போல் ஆரஞ்சு கிலோ ரூ. 140க்கும், மாதுளை கிலோ ரூ. 250க்கும். 10 கிலோ கொண்ட மாதுளை ரூ. 2500க்கும், சாத்துக்குடி கிலோ ரூ.80லிருந்து ரூ.100க்கும், பன்னீர் திராட்சை கிலோ ரூ. 100க்கும், கிர்ணி கிலோ ரூ. 50க்கும், அன்னாசிப்பழம் ரூ. 90க்கும் விற்பனையாகிறது. இதனால் ஜூஸ் கடைகளிலும் விலையேற்றத்திற்கு தகுந்தவாறு பழச்சாறுகளின் விலையும் உயர்ந்துள்ளது.