தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்து கூட்டாய்வு தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது.


பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு


ஆண்டுதோறும் தனியார் பள்ளி வாகனங்கள் தகுதி குறித்த ஆய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளிகளின் 235 வாகனங்கள் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.


ஆய்வு செய்த குழுவினர்


மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவன், ஏ.டி.எஸ்.பி . முத்தமிழ்செல்வன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அமலா அடங்கிய குழுவினர் வாகனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்தனர்.




இருக்கைகள், அவசர வழி கதவு ஆய்வு


இதில் வாகன இருக்கைகள், படிக்கட்டுகள், அவசர வழி கதவு ஆகியவற்றின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதேபோல் பள்ளி வாகனத்தில் தீயணைப்பு கருவிகள், அவசர தேவைக்கான மருந்துகள் போன்றவை உள்ளதா என்பது குறித்தும் குழுவினர் ஆய்வு செய்தனர். ஒவ்வொரு வாகனத்திலும் ஏறி அனைத்தும் சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சரியில்லாத வாகனங்களுக்கு அனுமதி கிடையாது


பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆண்டுதோறும் பள்ளி வாகனங்களின் தகுதி குறித்த ஆய்வு துல்லியமாக செய்யப்படுகிறது. படிக்கட்டுகள், அவசர கால கதவு, அவசர தேவை மருந்துகள், இருக்கைகள், பள்ளி குழந்தைகளின் புத்தகப்பை வைக்கும் பகுதி உட்பட அனைத்து அம்சங்களும் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இதில் சரியில்லாத வாகனங்கள் அவற்றை சரி செய்த பின்பே சாலைகளில் இயக்க அனுமதி அளிக்கப்படும். அதேபோல் பள்ளி முடிந்து மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் பொழுது அவர்கள் சாலைகளை கடந்து செல்ல உதவியாளர் உதவ வேண்டும் என்பது குறித்து பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


715 வாகனங்கள் ஆய்வு


இதேபோல் பட்டுக்கோட்டையில் 260 வாகனங்கள் கும்பகோணத்தில் 220 வாகனங்கள் என மாவட்ட முழுவதும் மொத்தம் 715 வாகனங்கள் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தஞ்சாவூரில் பள்ளிகளுக்கான வாகனங்களில் ஆய்வுக்கு 235 வாகனங்கள் வந்ததில் 9 வாகனங்கள் தற்காலிக தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் சில குறைகள் உள்ள வாகனங்கள் மீண்டும் அந்த குறைகளை நிவர்த்தி செய்த பின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.


17 வாகனங்கள் தகுதியில்லாதவை


பட்டுக்கோட்டையில் பள்ளிகளுக்கான வாகனங்கள் கூட்டாய்வு செய்யப்பட்டதில் மொத்தம் உள்ள 260 வாகனங்களில் 218 வாகனங்கள் ஆய்வுக்கு வந்தது. இதை கூட்டாய்வு செய்த போது 17 வாகனங்கள் போதிய தகுதி இல்லாத காரணத்தால் அவற்றை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.