தஞ்சை அருகே பள்ளியில் மாணவர்கள் வாயில் டேப் ஒட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


நடந்தது என்ன?


தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பட்டியில் உள்ள தொடக்கப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் வாயில் தலைமை ஆசிரியர் டேப் ஒட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, விசாரணையின்போது வகுப்பு ஆசிரியை சிறிது நேரம் ஒரு மாணவனை பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு மற்றொரு வகுப்பறைக்கு செல்லும்போது மாணவர்களே வாயில் டேப் ஒட்டியதாகவும் அதனை மற்றொரு ஆசிரியர் புகைப்படம் எடுத்து பரப்பியதாகவும் தெரிய வந்துள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


இந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான புனிதா ஒரு மாணவி உட்பட 5 மாணவர்கள் வாயில் செல்லோ டேப் ஒட்டி இரண்டு மணி நேரமாக வகுப்பறையில் உட்கார வைத்ததாகவும் கூறப்பட்டது.


இதை வாசிக்க மறக்காதீங்க: உங்க வீட்டு குழந்தைகளை இப்படி செய்வீங்களா?.... இப்படியா தண்டனை கொடுப்பீங்க..! 


பெற்றோருக்கே தெரியாத நிலை


முன்னதாக பள்ளியில் இந்த சம்பவம் நடந்தது பெற்றோருக்கே தெரியாத நிலை இருந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் புகைப்பட ஆதாரத்துடன் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்தனர்.


ஆசிரியர்களை இடம் மாற்ற உத்தரவு


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை செய்து ஆசிரியர்கள் மாற்றுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.


சம்பந்தப்பட்ட அய்யம்பட்டி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து வட்டாரக் கல்வி அலுவலர் தமிழ்வாணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.