தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கூடுதல் போதைக்கு ஆசைப்பட்டு மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததால் இருவர் பலியாகினரா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், சக்கரப்படித்துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் கரையில் இருவர் மர்மமான முறையில் இறந்த நிலையில் கிடந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்துவிட்டு கும்பகோணம் கிழக்கு போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து கிடந்த இருவரின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் இறந்து கிடந்தவர்கள் கும்பகோணம் பெருமாண்டியைச் சேர்ந்த பாலகுரு (48), கருணைக்கொல்லையை சேர்ந்த சவுந்தரராஜன் (43) என்பது தெரிய வந்தது. நண்பர்களான இருவரும் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இரண்டு பேரும், தினமும் கும்பகோணம் சக்கரப்படித்துறை, காவிரி ஆற்றின் படித்துறையில் அமர்ந்து மது அருந்துவது வழக்கம். அதேபோல் நேற்று இரவு இவர்கள் இரண்டு பேர் உள்பட நான்கு பேர் அப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியது தெரியவந்தது.
மது குடிப்பதற்கு முன்பாக பாலகுரு, சவுந்தரராஜன் இருவரும் மதுப்பாட்டிலுடன் சேர்ந்து சானிடைசரையும் கொண்டு வந்துள்ளனர். இதனை கண்டவுடன் அருகில் இருந்தவர் சானிடைசரை குடித்தால் இறந்து விடுவாய் என தெரிவித்தும், இரண்டும் பேரும் அந்த நபர் கூறியதை அலட்சியப்படுத்திவிட்டு மதுவில் சானிடைசர் கலந்து குடித்தால் போதை அதிகம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். பின்னர் மது அருந்தியுள்ளனர். இந்நிலையில் இன்று இருவரும் ரத்தக்கறையுடன் இறந்து கிடந்துள்ளனர். இத்தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கும்பகோணம் டி.எஸ்.பி., கீர்த்திவாசன், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, தடயவியல் பிரிவு துணை இயக்குனர் ராமசந்திரன் தலைமையில் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் கிடந்த ரத்தமாதிரிகளை போன்றவற்றை சேகரித்து ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.
மேலும், இறந்தவர்கள் அருகில் மதுப்பாட்டில்களும், சானிடைசர் பாட்டில்களும் கிடந்ததால், இவர்கள் கூடுதல் போதைக்கு மதுவில் சானிடைசர் கலந்து குடித்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
மற்றொரு சம்பவம்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா பகுதியை சேர்ந்த மோசஸ் என்பவரின் மகன் ஸ்டாலின் (32). திருப்பூரில் டெய்லராக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலகுறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் ஊருக்கு வந்த அவர் தனது தாயுடன் வசித்து வந்தார். தொடர்ந்து கும்பகோணம் மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்ததில் ஸ்டாலினுக்கு காசநோய் இருப்பது தெரியவந்தது.
இதனால் அங்கு கடந்த 13-ந் தேதி முதல் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், தனது தாய் உடன் இருந்து கவனிப்பதால் அவருக்கு காசநோய் பரவிவிட கூடாது என்று மற்றவர்களிடம் பேசி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற்று வந்த வார்ட்டின் அருகில் உள்ள அறையில் தனது தாயின் சேலையில் தூக்குமாட்டி ஸ்டாலின் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தநிலையில் காலையில் பணிக்கு வந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் தூக்கில் ஸ்டாலின் பிணமாக தொங்குவதை பார்த்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஸ்டாலின் உடலை மீட்டு பிரதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் கொடுத்த புகாரின் பேரில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கூடுதல் போதைக்கு ஆசை... மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததால் 2 பேர் மரணமா..? - கும்பகோணத்தில் அதிர்ச்சி
என்.நாகராஜன்
Updated at:
22 Sep 2023 07:04 PM (IST)
கும்பகோணத்தில் கூடுதல் போதைக்கு ஆசைப்பட்டு மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததால் 2 பேர் மரணம்?
உயிரிழந்தவர்கள்
NEXT
PREV
Published at:
22 Sep 2023 07:04 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -