தஞ்சாவூர்: புதிய பொலிவு பெறுகிறது தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம். புனரமைப்பு பணிகள் தொடங்கி விட்டன.
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் ரூ.2.50 கோடி செலவில் ப வடிவத்தில் சாலை அமைக்கப்பட்டு புனரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. இதில் 3 இடங்களில் கார், ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி, இறக்கும் வகையில் நிழற்குடை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் 8-வது உலகத்தமிழ் மாநாடு 1995-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது தஞ்சையில் மேம்பாலங்கள், மணிமண்டபம், கோபுரங்கள், வரவேற்பு தூண்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. மேலும் பல்வேறு வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் தஞ்சை புதிய பஸ் நிலையமும் கட்டப்பட்டது.
இங்கிருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, திருச்சி, சென்னை, பெங்களூரு, வேளாங்கண்ணி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ் நிலையம் இரவு, பகல் என 24 மணி நேரமும் பரபரப்புடன் காணப்படும். இந்த நிலையில் இந்த பஸ் நிலையத்தை மேலும் விரிவுபடுத்தி புனரமைக்க மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் புனரமைக்கப்பட உள்ளது. தற்போது பஸ் நிலையத்திற்குள் செல்லும் சாலை மற்றும் வெளியே வரும் சாலைக்கு பதிலாக பஸ் நிலைய சுற்றுச்சுவரையொட்டி சுற்றிலும் ப வடிவத்தில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பஸ்நிலையத்தில் ஓரத்தில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு சாலை அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றிலும் சாலை அமைத்த பின்னர் ப வடிவத்தில் உள்ள சாலையின் ஓரத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுகிறது. இதில் பஸ் நிலைத்திற்குள் பயணிகளை கார் மற்றும் ஆட்டோக்களில் ஏற்றி வரும் வாகனங்கள் இந்த 3 இடங்களில் மட்டும் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேலும் இந்த பணிகள் முடிவடைந்த பின்னர் பஸ் நிலையத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, ஆங்காங்கே அழகுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ப வடிவத்தில் சாலை அமைக்கப்படும் போது இதில் இருந்தே அருகில் உள்ள ஆம்னி பஸ்கள் நிறுத்தத்திற்கு பஸ்கள் செல்லவும் சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.