தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டரில் 14 வயது சிறுமியின் நுரையீரலில் சிக்கி இருந்த ஊசியை அறுவை சிகிச்சை இன்றி பிரான்கோஸ்கோபி சிகிச்சையில் மருத்துவக்குழுவினர் அகற்றினர். இதனால் எவ்வித பாதிப்பும் இன்றி சிறுமி நலமுடன் வீடு திரும்பினார்.


சிறுமி விழுங்கிய ஊசி


தஞ்சாவூரில் செயல்பட்டு வருகிறது ஸ்ரீகாமாட்சி மெடிக்கல் சென்டர். இங்கு நோயாளிகளுக்கு பல்வேறு சிகிச்சைகளும் சிறந்த முறையில் அளிக்கப்பட்டு வருகிறது. மிக எளிய கட்டணத்தில் பல்வேறு சிகிச்சைகளை காமாட்சி மருத்துவமனை மருத்துவ குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் உடை அணியும் போது தவறுதலாக ஊசியை விழுங்கிய 14 வயது சிறுமியின் உயிரை அறுவை சிகிச்சை இன்றி ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர்.


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 22 ஆம் தேதி உடை அணியும் போது தவறுதலாக ஊசியை விழுங்கி விட்டார். இதனால் இந்த சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சுவாசிக்க திணறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அன்று இரவு ஆம்புலன்ஸ் வாயிலாக தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டருக்கு அழைத்து வந்தனர்.




பரிசோதனைகள் செய்த டாக்டர்கள் குழு


அங்கு சிறுமியை நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர் எஸ்.அருண் தேவையான பரிசோதனைகள் மேற்கொண்டதில் சிறுமியின் நுரையீரலில் ஊசி சிக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் அருண் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ப்ரோன்கோஸ்கோபி மூலம் எவ்வித ஆபரேஷன் செய்யாமல் பக்க விளைவுகள் ஏதுமின்றி ஊசியை அகற்றி சிறுமியின் உயிரைக் காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர். மறுநாள் 23ம் தேதி அந்த சிறுமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


ப்ரோன்கோஸ்கோபி பயன்படுத்தப்பட்டது


இதுகுறித்து டாக்டர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது: சிறுமியின் நுரையீரல் பகுதியில் அந்த ஊசி இருப்பது சோதனைகள் வாயிலாக கண்டறியப்பட்டது. தொடர்ந்து அதன் தலைப்பகுதி இருக்கும் இடம் கண்டறியப்பட்டு அதை வெளியில் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக  ப்ரோன்கோஸ்கோபி பயன்படுத்தப்பட்டது. ஊசியின் கூர் முனை நுரையீரல் பகுதியில் குத்தியிருந்ததால் தலைகீழாக ப்ரோன்கோஸ்கோபியில் அமைக்கப்பட்டு இருந்த கிடுக்கி போன்ற அமைப்பை பயன்படுத்தி மெதுவாக ஊசியின் தலைப்பகுதியை பிடிக்கப்பட்டது.


3.22 நிமிடங்களில் வெளியில் எடுக்கப்பட்ட ஊசி


பின்னர் கீழ்நோக்கி செலுத்தி ஊசியை வெளியில் ப்ரோன்கோஸ்கோபிவாயலாக எடுத்தோம். இதற்கு 3.22 நிமிடங்களே ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைமை ஆலோசகர் டாக்டர் மோகன், ஆர்த்தோ டாக்டர் செந்தில்குமார், மயக்கவியல் நிபுணர் வசந்தகுமார் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழுவினர் இந்த சிகிச்சையில் பங்கேற்றனர். 


அறுவை சிகிச்சை இல்லாமல் ப்ரோன்கோஸ்கோபி வாயிலாக சிறுமியின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இல்லாவிடில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தால் நுரையீரல் பாதியளவு அகற்றப்பட்டு இருக்கும். இதனால் சிறுமியின் எதிர்கால வாழ்வு பாதிக்கப்படும் நிலை உருவாகி இருக்கும். மேலும் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் ரூ.4 லட்சத்திற்கு மேல் செலவும் ஏற்பட்டு இருக்கும்.


சிறுமியின் உயிரை காத்த மருத்துவக்குழுவினர்


ஆனால் ப்ரோன்கோஸ்கோபி சிகிச்சைக்கு மிகவும் குறைந்த கட்டணமாக ரூ.12 ஆயிரம் மட்டுமே அவர்களுக்கு செலவாகி உள்ளது. மேலும் ஒரே நாளில் சிறுமி வீட்டுக்கு திரும்பி விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் சிறுமியின் உயிரை காப்பாற்றிய மருத்துவக்குழுவினரை காமாட்சி மெடிக்கல் சென்டர் எம்.டி, இனியன், இணை எம்.டி., இன்பன் ஆகியோர் பாராட்டினர்.