தஞ்சாவூா்: தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை பால்பண்ணை எதிரில் மழைநீர் செல்லும்ட வாரியை ஒட்டிய பகுதியில் தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி பொதுக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் உள்ள மறியல், சிலோன் காலனி போன்றவற்றில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமாக வீடு கிடையாது. இதனால் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று நாஞ்சிக்கோட்டை சாலை பால்பண்ணை எதிரில் மழைநீர் செல்லும் வாரியை ஒட்டிய பகுதியில் உள்ள இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென்று திரண்டு தங்களுக்கு பட்டா வழங்க கேட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் கொட்டகை அமைக்க தேவையான பல்வேறு பொருட்களுடன் அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டு வந்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களும் வந்ததால் பரபரப்பு உருவானது. தொடர்ந்து அந்த இடத்தில் கொட்டகை அமைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஏ.டி.எஸ்.பி. மோகன்தாஸ் தலைமையில் வல்லம் டிஎஸ்.பி., நித்யா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார், தாசில்தார் சக்திவேல், வருவாய்த் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.




பின்னர் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்ட மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இது புறம்போக்கு இடம். எங்களுக்கு இந்த இடத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றனர். இதனை தொடர்ந்து அந்த நிலத்தின் உரிமையாளர் நான் தான் என கூறி ஒருவர் வந்து போலீசாரிடம் நான் சிராஜ்பூர் நகர் என உருவாக்கி இந்த இடத்தை சிறுது சிறிதாக விற்று வருகிறேன்.

இந்த நிலத்திற்கான பட்டா என்னிடம் உள்ளது. இது புறம்போக்கு இடம் கிடையாது. என் இடம் தான் என தெரிவித்தார். இதனால் இரு தரப்பினர் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து வருவாய்த்துறையினர் இந்த நிலம் யாருடையது என்பது குறித்து ஆய்வு மேற் வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில் இந்த நிலம் புறம்போக்குதான். ஆனால் பட்டா போட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த இடத்தை வீடுகள் இல்லாத எங்களுக்கு பட்டா போட்டு தரக்கோரி போராட்டம் முன்னெடுத்தோம். அதிகாரிகள் இதுகுறித்து ஆய்வு செய்து பின்னர் தெரிவிப்பதாக கூறியுள்ளனர் என்று தெரிவித்தனர்.