தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில், காங்கிரஸ் நிர்வாகி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ஆணை விழுந்தான் குளத்தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (26) தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மாணவரணி மாநில பொது செயலாளராக உள்ளார். இந்நிலையில் இன்று (23ம் தேதி) நள்ளிரவு 1:30 மணிக்கு, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஸ்ரீகாந்தின் வீட்டை நோக்கி பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதில் பாட்டில் வெடித்து சிதறியதில் வீட்டின் முகப்பு கதவில் இருந்த ஸ்கிரீன் பற்றி எரிந்தது. ஸ்ரீகாந்த் வீட்டின் வெளியே தீப்பிடித்து எரிவதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர், அலறிக் கொண்டு சத்தம் போட்டுள்ளனர். மேலும் ஸ்ரீகாந்த் பெயரை கூறி சத்தம் போட்டு அவரை எழுப்பினர். இதனால் பதறியடித்து வெளியில் வந்த ஸ்ரீகாந்த் ஸ்கிரீன் பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடன் அவர் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைத்தார்.

இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் இதுகுறித்து ஸ்ரீகாந்த் பட்டுக்கோட்டை நகர போலீசுக்கு தகவல் அளித்தார்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அக்கம்பக்கத்தில் உள்ள சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணம் என்ன? ஸ்ரீகாந்திற்கும் வேறு யாருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததா? அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாலை நேரத்தில் இப்படி பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். நல்லவேளையாக அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்து பார்த்ததால் தீப்பிடித்தது தெரிய வந்தது இல்லாவிடில் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கலாம்.

இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டு அலறியதால் எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்து விட்டனர். இல்லாவிடில் என்ன ;நடந்து இருக்கும் என்றே நினைத்து பார்க்க கூட முடியவில்லை. போலீசார் பாதுகாப்பு போடப்படுள்ளது. இருப்பினும் மனதிற்குள் பெரும் அச்சம்தான் உள்ளது என்றனர்.

போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், அக்கம் பக்கம் உள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவுகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து வந்த மர்மநபர்கள் யார் என்பது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என்றனர்.