தஞ்சாவூா்: கலகலப்பும், சலசலப்புமாக தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் நடந்து முடிந்தது. தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் மேயர் சண். ராமநாதன் தலைமையில் நடந்தது. துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் முதலாவதாக 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வரவு ரூ.344 கோடியே 46 லட்சத்து 37 ஆயிரமும், செலவு ரூ.324 கோடியே 22 லட்சத்து 9 ஆயிரமும் ஆகியுள்ளது. இதனால் உபரியாக மாநகராட்சியில் ரூ.20 கோடியே 24 லட்சத்து 28 ஆயிரம் உள்ளது என்று பெயர் தெரிவித்தார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
புண்ணியமூர்த்தி: கடந்த முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும் மாநகராட்சிக்கு நல்ல பெயர் கிடைத்தது. இந்த ஆண்டும் பட்ஜெட்டில் உபரியாக ரூ.20 கோடியே 24 லட்சம் உள்ளதை பாராட்டுகிறேன்.
கவுன்சிலர் மணிகண்டன்: ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்பட்டு பல்வேறு பணிகள் நடந்து வந்தன. தொடர்ந்து தான் தற்போது மாநகராட்சியில் உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு வருவாய் வளர்ந்துள்ளது. தற்போது மாநகராட்சியில் பொது நிதியிலிருந்து கடந்த மூன்று மாதமாக அடிப்படை பணிகள் எதுவும் நடைபெறவில்லை. சாலை பணிகள் அடிப்படை பணிகள் என எதுவும் நடக்கவில்லைஎன எதுவும் நடக்கவில்லை. திருவள்ளுவர் வணிக வளாகம் , காந்திஜி வணிக வளாகம் ஆகியவற்றில் விதிமுறைகள் மீறி விடப்பட்டதாக கூறி விதி எண் 316, 317-ன் படி விடப்பட்ட ஏலங்கள் ரத்து செய்யப்பட்டன. மீண்டும் மறு ஏலம் விடும் போது ஏற்கனவே விதிமுறைகளை மீறிய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தினேன். இதை மீறினால் நீதிமன்றத்தை நாடுவேன் எனவும் தெரிவித்தேன். இது தொடர்பாக நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளேன்.
ஆனால் தற்போது ஏலம் எடுத்தவர்கள் விதிமுறைகளை மீறவில்லை. அதிகாரிகள் தான் விதிமுறைகளை மீறி உள்ளார்கள் என விளக்கம் அளித்துள்ளீர்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். மூன்று ஆண்டுக்கு ஏலம் எடுத்தவர், ஏலம் விடுபவர் ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கூடாது என கூறி தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. விதிமுறைகளை மீறி ஏலம் விடப்பட்டதால் கடந்த ஆறு மாதமாக ரூ.2.50 கோடி அளவுக்கு மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே மீண்டும் மறு ஏலம் விடப்படும் போது ஏற்கனவே விதிமுறைகளை மீறிய நிறுவனங்கள் கலந்து கொள்ள கூடாது. இதற்கு முன்பு காமராஜர், சரபோஜி மார்க்கெட் என விடப்பட்ட ஏலத்திலும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. எனவே ஒட்டு மொத்தமாக அனைத்திற்கும் மீண்டும் மறு ஏலம் விட வேண்டும். காலி மனைகளுக்கான வரிகளை அதன் உரிமையாளர்கள் பலர் கட்டுவதில்லை. எனவே மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வெளியிட்டு உரிய வரி கட்டாத காலி மனைகளை மாநகராட்சி கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காலி மனைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது.
மேயர்: இதுகுறித்து ஒரே நடவடிக்கை எடுத்து அறிவிப்பு வழங்கப்படும். 10 ஆண்டுகள் உங்கள் ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. தற்போது 80 சதவீத தார் சாலை பணிகள் நடந்துள்ளது.
(அப்போது திமுக உறுப்பினர்கள் மணிகண்டனை பார்த்து மூன்று மாதம் பணிகள் எதுவும் நடக்கவில்லை என்கிறீர்கள். நீங்கள் கோமாவில் இருந்தீர்களா என்று கேட்க கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது)
கவுன்சிலர் கோபால்: தஞ்சை மேலவீதியில் பிரசித்தி பெற்ற பச்சைக்காளி, பவளக்காளி விழா நடைபெற உள்ளது. எனவே மாநகராட்சி சார்பில் அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகளையும் செய்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும். புதைவடை மின்கம்பிகள் திட்டம் செயல்படுத்தவில்லை . அதனையும் செயல்படுத்த வேண்டும். எனது வார்டில் சிறு சிறு வேலைகள் கூட சரிவர நடைபெறுவதில்லை. தண்ணீர் தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர்: இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தஞ்சை பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏதுமில்லை. உங்கள் வாட்டுப் பகுதியில் எங்கு தண்ணீர் வரவில்லை என்று கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆணையர் மகேஸ்வரி: தஞ்சை மாநகராட்சியில் காலிமனைகளில் அதன் உரிமைதாரர்களிடம் இருந்து சரியான முறையில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 80 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் வணிக வளாகம், காந்திஜி வணிக வளகத்தில் ஏலம் எடுத்த நிறுவனங்கள் விதிமுறைகளை மீறவில்லை. அதிகாரிகள் தான் விதிமுறைகளை மீறி உள்ளார்கள். இது தொடர்பாக நகராட்சி ஆணையரகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
சரவணன்: தஞ்சை புதிய பஸ் நிலைய இரு சக்கர வாகன பார்க்கிங் கட்டணம் ரூ.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே தங்கும் விடுதி கட்ட வேண்டும். பெரிய கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசில் ஏற்படுகிறது இது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெய் சதீஷ்: எனது வார்டில் கடந்த ஓராண்டுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டப்படி புதிதாக தார் சாலை போட வேண்டும். தொம்பன் குடிசை பகுதியில் புதிதாக ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது . ஆனால் அங்குள்ள சாலைகள் பழுது அடைந்துள்ளது. அதனை சரி செய்ய வேண்டும்.
கண்ணுக்கினியாள்: பூக்கடை தெரு சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் 200 மீட்டர் தொலைவுக்கு தான் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அதில் 100 மீட்டர் அளவில் சாலைகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பாதாள சாக்கடை கழிவு நீர் தெருவில் பெருகெடுத்து ஓடுகிறது. எனவே எனது கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்.
மேயர்: நாளை காலை அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
இதையடுத்து கவுன்சிலர் கண்ணுக்கினியாள் தனது வார்டு பிரச்சினைகள் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அப்போது மேயர் மற்ற கவுன்சிலர்கள் பேச வேண்டும் அமருங்கள் என்று தெரிவித்தார். தொடர்ந்து பாதாள சாக்கடை பணி மற்றும் சாலை பணிகள் சரிவர நடக்காது பற்றி தெரிவித்த கவுன்சிலர் கண்ணுக்கினியாள் திடீரென்று மாமன்ற கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார் .
முகமது சுல்தான் இப்ராஹிம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தஞ்சை மாநகரம் வளர்ச்சி அடைந்துள்ளது. அய்யங்குளம், சாமந்தான் குளம், பெத்தண்ணன் கலையரங்கம் உள்ளிட்டவை நவீனப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டில் ரூ.20 கோடி உபரி வருமானம் காட்டப்பட்டு உள்ளதற்கு பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீலகண்டன்: தஞ்சை விளார் சாலையில் பல இடங்களில் பாதாள சாக்கடை கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுவதை தடுத்து சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.
உஷா: எனது வார்டில் புதிதாக பாலம் கட்டி தர வேண்டும். கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் தொடர்ந்து சிறப்பிடம் பெற்று வருவதற்கு பாராட்டுக்கள்.
துணை மேயர் அஞ்சுகம்பூபதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறப்பான முறையில் நடந்து வருகிறது. தற்போது மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத்தொகை அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. தஞ்சை சரபோஜி கல்லூரியில் அறிவு சார் மையம், நூலகம் அமைத்ததற்கு நன்றி .
கவுன்சிலர் கேசவன்: நாய் தொல்லை அதிகம் உள்ளது. மாநகராட்சியால் பிடிக்கப்படும் நாய்கள் மீண்டும் அங்கேயே கொண்டுவந்து விடப்படுகின்றன. மக்கள் அச்சத்தில் உள்ளனர்
மேயர்: பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு கொண்டு வந்து விடப்படுகிறது. இல்லாவிடில் நாய்களை எங்கு விடுவது என்று சொல்லுங்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் தஞ்சை மாநகராட்சி உடன் 13 ஊராட்சிகள் இணைந்து விடும். அதன் பிறகு ரூ.680 கோடி அளவிற்கு மாநகராட்சி தரம் உயரும். தொடர்ந்து தஞ்சை மாநகராட்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த உரிமையாக இருந்து வரும் முதலமைச்சர், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், நகர்புறத் உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், கவுன்சிலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேசவன்: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட நாய்கள் இரண்டு பேரை கடித்துள்ளது.
தொடர்ந்து துணை மேயர் அஞ்சுக்கும் பூபதி நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுவதால் அதன் ஆக்ரோச தன்மை குறையும் என்று தெரிவித்தார். அப்போது மற்றொரு கவுன்சிலர் எழுந்து நீங்கள் டாக்டர் படித்தவர்கள் அதனால் வரமாக சொல்கிறீர்கள், நாங்கள் படிக்காதவர்கள் என்று தெரிவித்தார். அதற்கு துணை மேயர் படிக்காதவர்கள் தான் சட்டம் பேசுகிறார்கள் என்று மாமன்றத்தை கலகலப்பாக்கினார்.