தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் ஆணையர் சரவணக்குமாரிடம் குப்பைக்கிடங்கு முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.


தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ரூ.14 கோடி அளவில் முறைகேடு ஏற்பட்டதாக வந்த புகாரினை அடுத்து, மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் கா.சரவணக்குமாரிடம் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர்.


தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில், மாநகரில் 51 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகள் சேமித்து, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைக் கிடங்களில் குப்பைகளை தரம் பிரிக்க தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், முறையாக குப்பைகள் தரம் பிரிக்காமல் அதற்கான மாநகராட்சி நிதியை முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. 


இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த ஜானகி ரவீந்திரன், கா.சரவணக்குமார் ஆகியோரை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடிவு செய்தனர். அதன்படி தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கா.சரவணக்குமாரை வரவழைத்து சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. 


இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் கூறுகையில், தஞ்சாவூர் ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரிக்காமல் அந்த நிதி ரூ.14 கோடி அளவுக்கு முறைகேடு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், குப்பைகள் தரம் பிரிப்பது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆய்வறிக்கையில் தெரியவந்தது.


இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆணையராக பணியாற்றி வந்த ஜானகிரவீந்திரன், கா.சரவணக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் கா.சரவணக்குமாரை வரவழைத்து 2 மணி நேரம் விசாரணை நடத்தினோம். விசாரணையின் போது, போலீஸாரின் கேள்விக்கு சரவணக்குமார், மாநகராட்சியின் விதிமுறைகளுக்கு உட்பட்டே குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டதாக பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.


வரும் பிப்.26-ம் தேதி ஜானகி ரவீந்திரனை விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பி உ;ளளோம்.  இந்த முறைகேடு தொடர்பாக தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள் போதிய ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர் என்றனர்.