தஞ்சாவூர்: 2024- 2025ம் ஆண்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தலைமையில் நடைபெற்றது. 

தஞ்சாவூர் மாவட்ட மாணவர்களின் கல்வித்திறன் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள், ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கவும், மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மெதுவாகக் கற்கும் மாணவர்கள் மற்றும் அதிகத் திறன் கொண்ட மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தனி கவனம் செலுத்தி, சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு கல்விக்கு முக்கியத்துவம் அளித்தும், மாணவ, மாணவிகளின் திறனை, திறமையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இந்நிலையில் தஞ்சாவூர் எம்.பி. ச.முரசொலி ஏற்பாட்டின் படி 2024- 2025ம் ஆண்டு 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன், தஞ்சை மேயர் சன்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும்.

இந்த தொகுதிகளில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் 2024 - 2025 ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12 ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

அந்த வகையில் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 78 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு கேடயம், சான்றிதழ் எம்பி முரசொலி வழங்கினார். ஏற்கனவே 2024- 25 ஆம் ஆண்டு அரசு பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி அளவில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற அரசு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த 105 மாணவ, மாணவிகள் தஞ்சையின் நாடாளுமன்ற அலுவலகத்திற்கு அழைத்து நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலியால் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் பள்ளிகளை தேடி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற திட்டத்தின் அறிமுகம் செய்யப்பட்டு அந்த திட்டத்தின் கீழ் அரசு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு நேரடியாக தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி சென்று தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.பி., ச.முரசொலியின் இந்த நடவடிக்கைகள் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக அதிக மதிப்பெண் பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உரிய மரியாதையை அளித்து அவர்களை நேரில் சென்று வாழ்த்தி விருதும் கொடுத்து கௌரவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.