தஞ்சை மாவட்டம் வல்லத்தில் முதியவரின் கவனத்தை திசைத்திருப்பி ரூ.5 லட்சத்தை அபேஸ் செய்து பைக்கில் தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தஞ்சை மாவட்டம் வல்லம் மிக முக்கியமான பகுதியாக விளங்குகிறது. இப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் வல்லம் பஸ் ஸ்டாண்ட் வந்து தஞ்சை, திருச்சி உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். வல்லம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அரசு பள்ளிகள், வங்கிகள், போலீஸ் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ளது.


தினமும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், கூலித் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் வல்லம் வந்து செல்கின்றனர். எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். இத்தகைய சூழ்நிலையில் நேற்று மதியம் முதியவரின் கவனத்தை திசைத்திருப்பி மின்னல் வேகத்தில் பணப்பையை பறித்து சென்றுள்ளனர் மர்மநபர்கள்.


வல்லம் நடுத்தெருவை சேர்ந்த அடைக்கலம் என்பவரின் மகன் அமலநாதன் (62). விவசாயி. இவர் நேற்று மதியம் வல்லத்தில் தான் கணக்கு வைத்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியில் வந்தார். பின்னர் தன்னுடைய சைக்கிளில் பணப்பையை மாட்டி வீட்டிற்கு புறப்பட்டார்.




அப்போது பின்னால் இருந்து ஒரு மர்ம நபர் கீழே ரூ.100 பணம் கிடக்கிறது. உங்களுடையதா என்று கேட்டுள்ளார். அய்யய்யோ... நம்ம பணம் விழுந்து விட்டதா என்ற எண்ணத்தில் அமலநாதன் தன் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அந்த பணத்தை எடுத்துள்ளார். அப்போது அந்த மர்மநபர் அமலநாதன் சைக்கிளில் மாட்டியிருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு பைக்கில் வந்த மற்றொரு நபருடன் தப்பி சென்று விட்டார்.


100 ரூபாயை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து அமலநாதன் பார்த்தபோது சைக்கிளில் மாட்டியிருந்த பணப்பை காணாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போதுதான் அவருக்கு மர்மநபர் தன் கவனத்தை திசைத்திருப்பி பணப்பையை அபேஸ் செய்து கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது. உடனே அவர் இதுகுறித்து வல்லம் போலீசில் புகார் செய்தார். வல்லம் டி.எஸ்.பி., பிருந்தா, இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.


வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. வங்கி அமைந்துள்ள பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். மக்கள் நடமாட்டமும் அதிகம் இருக்கும். அவ்வாறான பகுதியில் இதுபோன்ற சம்பவம் நடந்தது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண