தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அணைக்கரை அருகே மதகு சாலை பகுதியில் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 வாலிபர்களில் ஒருவர் மீட்கப்பட்டார். மற்ற 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

கர்நாடகாவின் அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூரை நோக்கி பெருக்கெடுத்து வந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. தொடர்ந்து அணையில் இருந்து உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்தது. இதனால் மேட்டூரிலிருந்து 1 லட்சத்து 30 ஆயிரத்து கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கல்லணையில் இருந்து கொள்ளிடத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரித்தது.





தண்ணீர் கூடுதலாக திறக்கப்படுவதால் அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடுகிறது. இந்நிலையில் கும்பகோணம் அருகே அணைக்கரை அடுத்த மதகுசாலை கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மகன் கொளஞ்சிநாதன் (34), அதே கிராமத்தை சேர்ந்த இவரது நண்பர்கள் கலியமூர்த்தி மகன் ஆகாஷ் (24), சேகர் மகன் மஜ்னு என்கிற மனோஜ் வயது (22) கார்மேகம் மகன் அப்பு என்கிற ராஜேஷ் (22) இந்த 4 பேரும் நேற்று நள்ளிரவு மீன் பிடிப்பதற்காக வலைகளை எடுத்துக் கொண்டு அணைக்கரை கொள்ளிடத்திற்கு சென்றனர். அங்கு வலைவீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நால்வருக்கும் நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது.





இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் திடீரென்று தண்ணீரின் வரத்து அதிகமானது. இதனால் மீன் பிடித்துக் கொண்டு இருந்த இருவரும் அதிகளவு தண்ணீரை கண்டு அச்சப்பட்டு அருகில் இருந்த ஒரு மணல்திட்டில் ஏறி நின்று தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளனர். நேரம் ஆக, ஆக தண்ணீரின் வரத்து அதிகரித்துக் கொண்டே சென்றது. நான்கு பேருக்கும் நீச்சல் தெரியாததால் தவியாய் தவித்துள்ளனர். இவர்களின் கூக்குரல் கேட்டு  அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது நால்வரும் கொள்ளிடம் ஆற்று தண்ணீர் சுழலில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.




 


உடனே இதுகுறித்து திருவிடைமருதூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ஆற்றில் நாணலை பிடித்துக் கொண்டு கொளஞ்சி நாதன் தத்தளிப்பதை கண்டு விரைந்து சென்று அவரை மீட்டனர்.

ஆனால் அவரது நண்பர்கள் ஆகாஷ், மனோஜ், ராஜேஷ் ஆகியோர் தண்ணீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டனர். மேலும் சம்பவ இடத்தில் வருவாய் துறை அலுவலர்கள், அதிகாரிகள் முகாமிட்டு ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட 3 பேரையும் தேடும் பணியை முடுக்கி விட்டு வருகின்றனர். படகு வரவழைக்கப்பட்டு தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அணைக்கரை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண