தஞ்சாவூர்: டெல்டா மாவட்டத்தில் முதல் முறையாக சுல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையை சென்னை கிளெனீகல்ஸ் உடன் இணைந்து தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்துள்ளது.
8 மணி நேரம் நீடித்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து சாலை விபத்தால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் தானமாக பெறப்பட்டு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இளைஞருக்கு பொருத்தப்பட்டிருக்கிறது. மீனாட்சி மருத்துவமனை மற்றும் சென்னை கிளெனீகல்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் குழுவினர் 8 மணி நேரம் நீடித்த சிகிச்சை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
பல்வேறு உறுப்புமாற்று சிகிச்சைகளுக்கு இந்தியாவில் புகழ்பெற்ற மையங்களில் ஒன்றாக சென்னையில் அமைந்திருக்கும் கிளெனீகல்ஸ் மருத்துவமனையுடன் டெல்டா பகுதியில் பல்வேறு சிறப்பு பிரிவுகள் கொண்ட முன்னணி மருத்துவமனையான தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து செயல்படுகிறது. கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை நிபுணர்கள் தஞ்சாவூருக்கு வருகை தந்து மீனாட்சி மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சைகளை ஆலோசனைகளையும் வழங்குகின்றனர்.
இந்த இரு மருத்துவமனைகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறுவைசிகிச்சை நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு குழு இந்நோயாளிக்கு 8 மணி நேரம் நீடித்த உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது மீனாட்சி மருத்துவமனையின் இரைப்பை அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர். பிரசன்னா, மயக்கமருந்தியல் நிபுணர் டாக்டர். ஜி அரிமாணிக்கம் மற்றும் கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் கல்லீரலியல் மற்றும் கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையியல் துறை இயக்குநர் டாக்டர். ஜாய் வர்கீஸ், கல்லீரல் அறிவியல் மைய கிளினிக்கல் லீட் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் ரஜனிகாந்த் பாட்சா மற்றும் மயக்க மருந்தியல் துறை தலைவர் டாக்டர். செல்வகுமார் மல்லீஸ்வரன் ஆகியோர் இணைந்து இந்த அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
கடுமையான கொழுப்பு நிறைந்த ஈரல் பாதிப்பு
கடுமையான கொழுப்பு நிறைந்த ஈரல் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இந்நோயாளி மீனாட்சி மருத்துவமனையில் பல மாதங்களாக கல்லீரலுக்கான சிகிச்சையை பெற்று வந்தார். கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சை மட்டுமே அவரது உயிரை காப்பாற்றுவதற்கான ஒரே வழிமுறையாக இருந்தது. அவரது குடும்பத்திலிருந்து பொருத்தமான தானமளிப்பவர் இல்லாத காரணத்தால் அரசின் உறுப்புமாற்று பதிவகத்தில் இந்நோயாளியின் பெயரும் சேர்க்கப்பட்டது. தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சாலை விபத்தால் பாதிக்கப்பட்டு செய்தி பெற்று வந்தவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது கல்லீரல் அதிர்ஷ்டவசமாக, இந்நோயாளிக்கு பொருத்தமானதாக இருந்தது. அதன்படி மூளைச்சாவு அடைந்த நபரிடமிருந்து எடுக்கப்பட்ட கல்லீரல் தானமாக பெறப்பட்டு, மீனாட்சி மருத்துவமனையில் உறுப்புமாற்று சிகிச்சைக்காக உடனடியாக கொண்டு வரப்பட்டது.
சிக்கல் ஏதுமின்றி நடைபெற்ற இந்த உறுப்புமாற்று சிகிச்சைக்கு பிறகு நோயாளி விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பி தற்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.
நோயாளியின் வாழ்க்கையில் புதிய அத்தியாயம்
இச்சிகிச்சை குறித்து டாக்டர். பிரசன்னா கூறியதாவது: 'வெற்றிகரமான இந்த உறுப்புமாற்று சிகிச்சையினால் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வாய்ப்பு இந்நோயாளிக்கு கிடைத்திருக்கிறது. டெல்டா பகுதியில் முதல் முறையாக செய்யப்பட்ட கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையாக இது இருப்பது இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. உள்ளூர் நோயாளிகளுக்கு. தங்கள் பகுதியிலேயே திறன்மிக்க உறுப்புமாற்று சிகிச்சை மையம் இப்போது இருப்பது புதிய நம்பிக்கையை அவர்களுக்கு தந்திருக்கிறது. கிளெனீகல்ஸ்
மருத்துவமனையுடனான எமது ஒத்துழைப்பானது இரண்டாம் நிலை நகரமான தஞ்சாவூருக்கு மேம்பட்ட உறுப்புமாற்று சிகிச்சை நிபுணத்துவத்தை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வெற்றிகரமான, வரலாற்று சிறப்புமிக்க இத்தருணத்தில் இச்சாதனையை இம்மருத்துவமனை நிகழ்த்துவதற்கு உதவிய மருத்துவக்குழுவினர் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
நவீன மருத்துவ கட்டமைப்பு, திறன்மிக்க மருத்துவக்குழுவினர்
கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் டாக்டர். ஜாய் வர்கீஸ் பேசுகையில், கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு அதில் நிபுணத்துவம் மட்டுமன்றி நவீன மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளும் பிரத்யேகமான மருத்துவ மற்றும் ஆதரவு சேவைக் குழுவினரும் அவசியம். தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் இத்தகைய நவீன வசதிகளும் மற்றும் திறன்மிக்க மருத்துவ குழுவினரும் இருப்பது குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். உறுப்புமாற்று சிகிச்சை போன்ற மேம்பட்ட சிகிச்சை செயல்முறைகளுக்காக பெருநகரங்களுக்கு இனிமேல் டெல்டா பகுதியை சேர்ந்த மக்கள் பயணிக்க வேண்டியதில்லை. வெற்றிகரமாக நடைபெற்றிருக்கும் இந்த கல்லீரல் உறுப்புமாற்று சிகிச்சையின் மூலம், தரம் மற்றும் பாதுகாப்பில் சமரசம் எதுவுமின்றி இத்தகைய சிக்கலான அறுவைசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்வது முற்றிலும் சாத்தியமானது என்பதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். சிகிச்சைக்காக பெருநகரங்களுக்கு பயணிப்பதற்கான அசௌகரியங்களையும், செலவுகளையும், நோயாளிகளும் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இனிமேல் தவிர்க்கலாம். தரமான சிகிச்சையை தஞ்சாவூரிலேயே இனி பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.