தஞ்சாவூர்: அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் அடிப்படையில், முதற்கட்டமாக 100 பேருக்கு விரைவில் வேலை வழங்கப்படவுள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். இதில், கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர் பேசியதாவது: 


தமிழகத்தில் 12,525 பஞ்சாயத்துகளுக்கும் 86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொண்டு சேர்க்க கடந்த பிப்ரவரியில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 13 மாவட்டங்களில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் பட்டித் தொட்டி எங்கும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக, முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிக்கான நிதியை 37 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் கடந்த ஆண்டு விண்ணப்பித்தவர்கள் 6 லட்சத்து 71 ஆயிரம் பேர். அதே சமயம் இந்தாண்டு விளையாட்டுப் போட்டிக்காக விண்ணப்பித்தவர்கள் 11 லட்சத்து 56 ஆயிரம் பேர். 




தமிழக விளையாட்டு வீரர் வீராங்கனைகள் உலக அளவில் சாதனை


தமிழக விளையாட்டு வீரர் வீராங்கனைகள் உலக அளவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். இந்த ஆண்டு ஹங்கேரியில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில், இந்தியாவை சேர்ந்தவர்கள் தங்கப்பதக்கம் வென்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இந்தியாவிற்கான தங்க பதக்கத்தை உறுதி செய்தார். அதே போல் கிராண்ட் மாஸ்டர்  பிரக்கி ஆனந்தா, வைஷாலி, ஸ்ரீநாத் நாராயணன் இந்தியா அணியில் சிறப்பாக பங்கேற்று அவர்கள் நாடு திரும்பிய உடனே முதல்வர் ஊக்கப்படுத்த விதமாக ரூ.90 லட்சம் வழங்கினார். 


பாரா ஒலிம்பிக்கில் வெற்றி பதக்கம்


அதே போல பாரீசில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் 6 பேர் கலந்துக்கொண்டனர். அவர்கள் போட்டிக்கு செல்வதற்கு முன்பு அவர்களுக்கு 7 லட்சம் ரூபாயை ஊக்கத் தொகையை முதல்வர் வழங்கினார். அந்த ஆறு பேரில், துளசிமதி, மனிஷா, நித்யஸ்ரீ, மாரியப்பன் ஆகிய நான்கு பேர் வெற்றி பெற்று பத்தக்கங்களுடன் நாடு திரும்பினர். இதில் வெள்ளி பதக்கம் வென்ற துளசிமதிக்கு 2 கோடியும், வெண்கல பதக்கம் வென்ற நித்யஸ்ரீ, மனிஷா,மாரியப்பன் ஆகியோருக்கு தலா ஒரு கோடியும் என 5 கோடியை முதல்வர் வழங்கினார்.  கேலோ விளையாட்டுப் போட்டியில், 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பத்தகம் வென்று, இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடத்தை பெற்று பெருமை சேர்த்துள்ளது.


3 சதவீதம் அடிப்படையில் 100 பேருக்கு வேலை


அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் அடிப்படையில், முதற்கட்டமாக 100 பேருக்கு விரைவில் வேலை வழங்கப்படவுள்ளது. கும்பகோணத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் எனச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது, அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் இவ்வாறு அவர் பேசினார். 


முன்னதாக மாங்குடியில் இந்தி மொழிப்போர் தியாகி ரத்தினம் உருவச்சிலையையும், வளையப்பேட்டையில் ரூ. 54 லட்சத்தில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் மற்றும் நூலகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். 


இதில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் சீ,.வீ.மெய்யநாதன், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், எம்பி எல்.கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் சாக்கோட்டை க. அன்பழகன், எம்.எச், ஜவாஹிருல்லா, துரை,சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மேயர்கள் க.சரவணன், சண்.ராமநாதன், துணை மேயர்கள் சு.ப.தமிழழகன், அஞ்சுகம் பூபதி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.