தஞ்சாவூர்: எங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு தொடர்ந்து செயல்படுத்தி வரும் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனுக்கு நாங்கள் மனப்பூர்வமாக கடமைப்பட்டுள்ளோம் என்று சாலையோர வியாபாரிகள் நெகிழ்ச்சியாக தெரிவித்தனர். என்ன காரணம் தெரியுங்களா?
தஞ்சாவூர் மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகள் பயன்பெறும் வகையில் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்துள்ளவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் மேயர் சண்.ராமநாதன். இது குறித்து சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டமும் நடந்துள்ளது.
சாலையோரம் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு பெரிய அளவில் லாபம் என்பது கிடைக்காத ஒன்று. மழை, வெயில் காலத்தில் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கின்றனர். மேலும் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதால் கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் வட்டிக்கு கொடுக்கும் நிலையே இருந்து வந்தது. இதனால் அவர்கள் வாழ்க்கை நிலை மிகவும் சிரமத்திற்கு உரிய ஒன்றாக இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலோடு 'தஞ்சாவூர் மாநகராட்சியின் சாலையோர வியாபாரிகள் பயன்படும் வகையில் அவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் வாயிலாக வட்டியில்லா கடன் வழங்கப்பட்டு வருகிறது.
இது தினசரி காய்கறி வியாபாரம், தள்ளுவண்டியில் உணவகம் வைத்திருப்பவர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் என்று பல்வேறு வகையான சாலையோர வியாபாரிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. முதலில் ரூ. 10,000/- மும் அந்த கடன் முடிவுற்றபிறகு 25000/- மும் அதன்பிறகு ரூ.50000 வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2929 சாலையோர வியாபாரிகள் ரூ. 10,000 மும்,1035 சாலையோர வியாபாரிகள் ரூ. 25,000 மும், 217 சாலையோர வியாபாரிகள் ரூ. 50,000 மும் மொத்தம் 4,181 சாலையோர வியாபாரிகள் வட்டியில்லா கடன் பெற்று பயனடைந்துள்ளனர்.
மேலும் அவர்களுக்கு சாலையோர வியாபாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்பட்டும், அவர்களது நலன் கருதி குழுக்கள் அமைக்கப்பட்டு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் வருமானத்தை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த திட்டத்தை வெற்றிகரமாக தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் செயல்படுத்தி வருகிறார். மாநகராட்சியால் செய்யப்பட்டிருந்த விதி 270 வசூல்-ன் கீழ் சாலையோர கடைகளுக்கான தொகையினை தினந்தோறும் வசூல் செய்வதனை ரத்தும் செய்துள்ளார். இதுவரை 4181 சாலையோர வியாபாரிகள் வட்டியில்லாத கடன்களை பெற்று தங்களின் வியாபாரத்தை உயர்த்திக் கொண்டுள்ளனர். மேலும் 2000 வியாபாரிகள் வட்டியில்லா கடன் பெற விண்ணப்பித்துள்ளனர்.
இனி வரும் காலங்களிலும் சாலையோர கடைகளுக்கு எவ்விதமான தொகையும் வசூல் செய்யப்படாது . சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடனை பெறுவதற்கும், வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெறுவதற்கும் மாநகராட்சியினை அனுகி விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதிக வட்டிக்கு பணம் வாங்கி அவதியடைந்துள்ள நிலை தற்போது மாறியுள்ளது. இனியும் அவர்கள் தங்களின் வியாபாரத்தை மாநகராட்சி மூலம் வழங்கப்படும் வட்டியில்லா கடனை பெற்று சரியான முறையில் திருப்பி செலுத்தி மேலும் பண உதவி பெற்று பயனடையலாம்.
இத்திட்டத்தை வெற்றிகரமாக தொடர்ந்து செயல்படுத்தி வரும் மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், சாலையோர வியாபாரிகள் நலனையும், அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள இந்த திட்டம் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் படி சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். சாலையோர வியாபாரிகளின் குடும்பத்தினர் எவ்வித பொருளாதார நெருக்கடியிலும், இடர்பாடுகளிலும் சிக்கி கொள்ளாத வகையில் வட்டியில்லாத கடனை வழங்கி உதவி வருகிறோம் என்றார்.
சாலையோர வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், தொடர்ந்து எங்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோருக்கு நாங்கன் மனப்பூர்வமான நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிரமப்பட்டு உழைக்கும் பணத்தை வட்டிக்கே கொடுத்து எங்களின் வியாபாரத்தை உயர்த்திக் கொள்ள முடியாமல் தவித்து வந்தோம். இந்த வட்டியில்லா கடன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி, எங்களுக்கு பக்கபலமாக இருக்கும் மாநகராட்சி மேயர் மற்றும் நிர்வாகத்தினருக்கு மீண்டும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.