தஞ்சாவூர்: தஞ்சாவூர் திருவள்ளுவர் வணிக வளாகம் அருகில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு கார் நிறுத்துமிடத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.

தஞ்சை மாநகரில் மக்கள் தொகை பெருக்கத்தின் தொடர்ச்சியாக வாகனங்களின் எண்ணிக்கையும் பெருமளவில் பெருகியதன் காரணமாக வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்துவது என்பது ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கான இடப்பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இவற்றை தவிர்க்க தஞ்சை காந்திஜிசாலை, தென்கீழ் அலங்கத்தில் உள்ள வணிக வளாகம், அண்ணாசாலை ஆகியவற்றில் வாகனங்கள் நிறுத்தும் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களுக்கு கார்கள், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரி சாலை, தெற்கு அலங்கம் பகுதிகளிலும் கார்கள் நிறுத்தும் இடம் இல்லாததால் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லக்கூடிய நிலை உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. சாலையோரத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் நிலை இருந்து வந்தது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தஞ்சை மாநகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக கார் நிறுத்தும் வகையில் பல அடுக்கு கார் நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி தஞ்சை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ரூ.2.50 கோடி செலவில் பல அடுக்கு கார் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது.

56 கார்களை நிறுத்தக்கூடிய வகையில் இந்த வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த கார் நிறுத்துமிடத்தை நேற்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் திமுக மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாவை ஹனிபா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குமார்,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், ஹக்கீம், கபிலன், தஞ்சை பிரகதீஸ், தீபன், சரண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கார் நிறுத்தும் இடத்தில் பன்னடுக்கு லிப்ட் பகுதியில் 56 கார்களும், தரைத்தளத்தில் 30 கார்களும் நிறுத்தும் வகையில் இட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கார் வாகன நிறுத்துமிடத்திற்கு 12 மணிநேரத்திற்கு ரூ.50 மட்டும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கார் நிறுத்துமிடம் திறக்கப்பட்டுள்ளதால் பழைய பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கார் நிறுத்துவது குறைந்து போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அருமையான கார் நிறுத்துமிடத்தை சாலைகளில் கார்களை நிறுத்தாமல்  இந்த குறைந்த கட்டணத்தில் செயல்படும் கார் நிறுத்துமிடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி பொதுமக்கள் பயன் பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மேலும் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் இந்த கார் நிறுத்துமிடம் அமைவதற்கும், இதனை திறந்து வைத்த மேயர் சண்.ராமநாதன் மற்றும் மாநகராட்சியை சேர்ந்த அனைவருக்கும் பொதுமக்கள் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.