தஞ்சாவூர்: சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான். அதை தான் பதவியேற்ற நாளில் இருந்து பல முறை செய்து காட்டிவிட்டார் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன். அந்த பட்டியலில் தற்போது மற்றொன்றும் இணைந்துள்ளது.


வலுவான அரசியல் பின்னணி இருந்தாலும் எளிமை


தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலின் போது வேட்பாளர் சீட்டை பிடித்துவிட வேண்டும் என பலர் போட்டியிட்டாலும், கோடிகளில் செலவு செய்ய சிலர் தயாராக இருந்தும், உதயநிதி ஸ்டாலின், சண்.இராமநாதன் பெயரை டிக் செய்ததுடன் அவர்தான் வேட்பாளர் என்பதிலும் உறுதியாக இருந்து அறிவித்தார். இதன் பின்னணியில் சண்.இராமநாதனின் எளிமைதான் அடங்கியுள்ளது. 


முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு நெருக்கமானவர். முதல்வர் ஸ்டாலின் தொடங்கி தற்ோதைய துணை முதல்வர் உதயநிதி வரை சண்'னை பெயர்ச் சொல்லி அழைக்கும் அளவிற்கு அறிமுகமானவர். ஆனால், அதை எந்த இடத்திலும் காட்டிக் கொள்ள மாட்டார் .கோஷ்டி அரசியலுக்குள் சிக்காமல் இருந்ததே இவரது பெரிய பலம்.


மக்களுடன் மக்களாக கலந்து பழகும் தன்மை


மூன்று முறை கவுன்சிலராக தேர்வு பெற்றவர். இதற்கும் இவரது எளிமையும், மக்களுடன் நெருங்கி பழகும் தன்மையும்தான் முக்கிய காரணம். கடந்த 13 வருடங்களாக தஞ்சாவூர்  பாலாஜி நகர் பகுதியில் மக்கள் சந்திக்கக் கூடியப் பகுதியில் தினமும் காலை இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஒதுக்கி மக்களோடு மக்களாக இருந்து பழகி, அவர்கள் சொல்கிற குறைகளை சரி செய்து கொடுத்து வருவதால் அந்தப் பகுதியில் இவருக்கென தனி அடையாளம் உள்ளது.




வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்கள் மனதில் இடம்பிடித்தார்


கவுன்சிலராக இருந்த வார்டில், தான் கொடுத்த வாக்குறுதிகளை நலதிட்டங்களாக நிறைவேற்றி கொடுத்ததால் அவர் மீது மக்களுக்கு நன்மதிப்பும், நட்பும் தொடர்கிறது. கவுன்சிலராக எப்படி இருந்தாோ அப்படியேதான் தற்போது மேயராக இருக்கும் போதும் அவரது எளிமை தொடர்கிறது. அரசியலில் வலிமையான அஸ்திவாரம் இருந்தாலும் அவர் எப்போதும் மக்களுடன் மக்களாக பழகும் தன்மை கொண்டவர் என்று அனைவராலும் பாராட்டப்படுகிறார்.


நரிக்குறவச் சிறுவர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்றினார்


மாநகராட்சி வார்டுகளில் உள்ள பிரச்னைகளை சரி செய்வதிலும், மக்கள் கூறும் பிரச்னைகளை தீர்ப்பதிலும் மட்டும் அவர் மேயராக செயல்படாமல் தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களின் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறார். அப்படி ஒரு நிகழ்வுதான் தற்போதும் நடந்துள்ளது. தஞ்சை காந்திஜி சாலையில் மேயர் சண். இராமநாதன் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது சாலையோரத்தில் நின்று ஊசி, மணி மாலை விற்பனை செய்து வந்த நரிக்குறவ சிறுவர்கள் மூன்று பேர் மேயர் சண்.ராமநாதனை பார்த்ததும் உற்சாகமாக அவரிடம் ஓடி வந்தனர். தீபாவளிக்கு எங்களுக்கு புது ட்ரஸ் வாங்கி கொடுங்கனு அந்த நரிக்குறவ சிறுவர்கள் மேயரிடம் கேட்டு உள்ளனர்.


உடன் தனது அலுவலகத்திற்கு வந்த மேயர் 3 செட் உடைகளை வாங்கி வரச் செய்துள்ளார். பின்னர் அந்த 3 நரிக்குறவ சிறுவர்களையும் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார். தீபாவளிக்கு புத்தாடைகள் கிடைத்த சந்தோஷத்தில் அந்த 3 சிறுவர்களும் மகிழ்ச்சியுடன் ஆட்டம் போட்டு சென்றனர். வயதானவர்கள் முதல் சிறுவர்கள் வரை யாராக இருந்தாலும் எளிமையாக அணுக முடிபவராக மேயர் சண்.இராமநாதன் திகழ்கிறார்.