தஞ்சாவூர்: யாருக்கும் யாரும் இல்லை என்ற எண்ணமே ஏற்படக்கூடாது என்பதுதான் என் விருப்பம். அதற்காகவே என் குடும்பமாக நினைத்து இவர்களுடன் நான் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுகிறேன் என்று மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகையை தன் குடும்பத்தினருடன் கொண்டாடாமல் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் கொண்டாடி, அங்கிருந்தவர்களை பாசத்தால் நெகிழ வைத்தது மட்டுமில்லாமால் ஆனந்த கண்ணீரை வரவழைத்து வட்டார் தஞ்சை மேயர் சண்.ராமநாதன். நான் உங்க பிள்ளைம்மா என்று கூறி மேலும் நெகிழ வைத்து விட்டார்.
தீபாவளி... பலருக்கு அது வலியும் கூட. உற்றார், உறவினர்கள் இருந்தும் ஒதுக்கப்பட்டு ஆதரவு இல்லாமல் மனதிற்குள் கனமான வலியை சுமந்து வாழும் முதியோர்களை அன்பு என்ற பிணைப்பில் கட்டி போட்டி நான் இருக்கிறேன் என்று வார்த்தைகளில் இல்லாமல் செயலிலும் செய்து காட்டி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆனந்தமாக உலா வரும்படி செய்து உள்ளார் தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன்.
தீபாவளி பண்டிகை அன்று புத்தாடைகள் அணிந்தோமா, குடும்பத்தினர் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்து நேரத்தை செலவிட்டோமா என்றுதான் பலருக்கும் அன்றைய பொழுது நகர்ந்திருக்கும். விவிஐபிக்கள் கூட தங்களின் குடும்பத்தினருடன் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மகிழ்ச்சி என்பது எப்படி இருக்கும்... வெடித்து சிதறும் பட்டாசுகள் போலவா அல்லது சாப்பிட்டு மகிழும் இனிப்பு போலவா. அதெல்லாம் இல்லைங்க... இதுதான் உண்மையான மகிழ்ச்சி என்று தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆண்டுதோறும் தீபாவளியை ஆதரவற்ற முதியோர் இல்லம் சென்று பிள்ளைகளின் அரவணைப்பு இல்லாமல் வாடும் முதியோர்களிடம் நானும் உங்கள் பிள்ளை தான் எனக் கூறி அவர்களை நெகிழ வைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்க வைத்து வருகிறார்.
ஆதரவற்ற முதியோர் பிள்ளைகள் வந்து பார்க்கவில்லையே என யாரும் கவலைப்படக் கூடாது என்றும் நான் மேயராக வரவில்லை, உங்கள் பிள்ளையாக வந்திருக்கிறேன் எனவும் கூறி தனது கையாலேயே அவர்களுக்கு தீபாவளி விருந்து வைத்து அவர்கள் மனமார, வயிறு நிரம்ப சாப்பிட்டதை கண்டு மகிழ்ந்தும் உள்ளார். பண்டிகை நாளன்று கூட பெற்றப் பிள்ளைகள் கூட எட்டிபார்க்காததால் மிகுந்த மன சஞ்சலத்தில் இருந்த முதியோர்கள், மேயர் சண்.ராமநாதன் வருகையால் கவலையை மறந்தனர். வயதை மறந்தனர். குழந்தையாகவே மாறிவிட்டனர். புஸ்வாணத்தை பற்றவைத்து அது படபடவென்று மேல் எழும்பியதை கண்டு பரவசப்பட்டு குழந்தையாக குதூகலித்தனர்.
உண்மையான மகிழ்ச்சி புத்தாடைகள் அணிவது, இனிப்புகள், அசைவ உணவுகள் சாப்பிடுவது, புதுப்படம் பார்ப்பது என தீபாவளி அன்று கொண்டாட்டங்கள் களைக்கட்டினாலும் இது போன்ற ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் இல்லங்களில் அவர்களை மகிழ்வித்து மகிழ்வதில் உள்ள ஆனந்தம் வேறு எதற்கும் ஈடாகாது என்பதை செய்தே காட்டி விட்டார் தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன். தொடர்ந்து தீபாவளியை இங்குதான் கொண்டாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், யாருக்கும் யாரும் இல்லை என்ற எண்ணமே இருக்கக்கூடாது. என் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்வதை விட இவர்களையே என் குடும்பமாக நினைத்து நான் இங்கு வந்து காலையில் அறுசுவை விருந்து அளித்து பின்னர் வெடி வெடித்து மகிழ்வித்து மகிழ்கிறேன். தங்களுக்கு யாரும் இல்லை என்று இவர்கள் எப்போதும் நினைக்கக்கூடாது. இவர்களின் மகனான நான் எப்போதும் இருப்பேன். இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் எப்போதும் செய்வேன். இதுபோன்று தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுவதில் உள்ள இன்பம் வேறு எதில் இருக்க முடியும். இவர்கள் அனைவரும் என்னை அவர்களின் மகனாகவே பார்க்கின்றனர். அவர்களின் மகனாக இருந்து மகிழ்விக்கிறேன். மனமும் நிறைந்து இவர்கள் கூறும் வாழ்த்துக்கள் தலைமுறைகள் தாண்டியும் நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.