தஞ்சைக்கு 2,600 டன் உரம் ஆந்திராவில் இருந்து சரக்கு ரயிலில் வந்தது. இத்தகவல் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். கோடையிலும் நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் மக்காச்சோளம், கரும்பு, எள், பயறு போன்றவையும் சாகுபடி செய்யப்படுகிறது.



இதற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் இருந்து அணை திறக்கப்பட்டால் குறுவை பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே மே மாதத்தில் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விட அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது.

அதே போன்று சம்பா, தாளடி சாகுபடியும் அதிகஅளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சம்பா, தாளடி சாகுபடிக்கு பல்வேறு இடங்களில் உரத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக யூரியா, டி.ஏ.பி. போன்ற உரங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் சாகுபடிக்கு தேவையான உரங்களை வரவழைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.





இந்த நிலையில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 42 வேகன்களில் உரம் தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 21 வேகன்களில் 1,300 டன் டி.ஏ.பி.யும், 21 வேகன்களில் 1,300 டன் யூரியா உரமும் என மொத்தம் 42 வேகன்களில் 2,600 டன் உரம் வந்தது.

இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உரம் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட உள்ளது. இத்தகவல் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






தேங்காய் உடைத்து நூதன போராட்டம்


 





கும்பகோணத்தில் தேங்காய்களை உடைத்து நூதன போராட்டம் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நடந்தது.

கும்பகோணம் ரெயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் பி.சின்னதுரை தலைமை வகித்தார். முன்னோடி விவசாயி ஆதி கலியபெருமாள் முன்னிலை வகித்தார். செயலாளர் சுந்தர.விமல்நாதன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

பிரதமரின் விவசாயிகள் வெகுமதி திட்ட நிதியை ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும், குத்தகை விவசாயிகளுக்கும், பிரதமர் விவசாயிகள் வெகுமதி திட்ட நிதியை பாரபட்சமின்றி வழங்க வேண்டும், காவிரி நதியினை தூய்மைப்படுத்தி பாதுகாக்க நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். உள்நாட்டு விவசாயிகள் நலன் கருதி தேங்காய், பனை வித்துக்களுக்கு நியாயமான விலை அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசு கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றிற்கு ரூ.160 விலையை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும். வட்டியில்லா கடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வழங்கப்படும் வேளாண் கடன்களை வட்டியில்லாமல் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. புவனேஸ்வரி நன்றி கூறினார்.