தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக கொண்டாடப்பட்டு வரும் பொங்கல் திருநாள் வரும் ஜனவரி 15 - ஆம் தேதி வெகு விமர்சியாக கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரிகள், பல்வேறு நிறுவனங்கள்  என பொங்கல் கொண்டாட்டம் கலை கட்டி வருகிறது. அதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். 




இதுபோன்று மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சியில் சிறப்பான முறையில் சமத்துவ பொங்கல்  விழா கொண்டாடப்பட்டது. நகரமன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில், நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தொடங்கி, தூய்மை பணியாளர்கள் வரை அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் சேர்ந்து புகையில்லா போகி மற்றும் பொங்கல் திருவிழாவில் அடுப்பில் மண்பானை வைத்து பொங்கல் பொங்கி கரும்பு வைத்து படையல் இட்டு வழிபாடு நடத்தினர். 




இந்த சமத்துவ பொங்கலுக்கு சிறப்பு விருந்தினராக மாயூரநாதர் கோயில் அபயாம்பிகை யானை வரவழைக்கப்பட்டு யானைக்கு மாலை அணிவித்து ஆசீர்வாதம் பெற்றனர். இந்த பொங்கல் விழாவில், நகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு, கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து கொடுத்து நகரமன்ற தலைவர், நகராட்சி ஆணையர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து கொண்டு சமத்துவ பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.




இந்து,  இஸ்லாமிய மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து மத  நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற சமத்துவ பொங்கல்.


மயிலாடுதுறை அருகே நீடூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இந்து, முஸ்லிம் மாணவ - மாணவிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இரு சமயத்தையும் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை சரிவிகிதத்தில் உள்ள இப்பள்ளியில் இந்து மற்றும் இஸ்லாமிய பண்டிகைகள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி இப்பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.




பள்ளித் தாளாளர் ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ரங்கோலி வரைதல், கயிறு இழுத்தல், கும்மி அடித்தல், கபடி விளையாட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் இஸ்லாமிய மாணவிகள் ஏராளமானோர் பொங்கல் வைத்தும், கும்மியடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அமைந்தது.




சீர்காழியில் தனியார் பள்ளி, கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம், உறியடித்தல், சிலம்பம் சுற்றுதல் உள்ளிட்ட போட்டிகளுடன் நூற்றுக்கணக்கான மாணவிகள் ஒன்றிணைந்து பாரம்பரிய முறைப்படி பொங்கலை கொண்டாடினர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழதென்பாதியில் இயங்கி வரும் விவேகானந்தா தனியார் மகளிர் கல்லூரியில் இன்று பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக கல்லூரி மாணவிகள் தங்கள் வீடுகளிலிருந்து அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பால் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வந்திருந்தனர். தொடர்ந்து மாணவிகள் கொண்டு வந்திருந்த பொருட்களை விளையாட்டு மைதானத்தின் நடுவே சுற்றிலும் கரும்புகள் கட்டப்பட்டு அடுப்புகள் வைத்து வண்ணம் தீட்டிய பானைகளில் இனிப்பு விதிக்க பொங்கல் வைத்து, கல்லூரி ஆசிரியர்கள் பொங்கல் வைத்தனர்.  




தொடர்ந்து  மாணவிகள் பங்கேற்ற உறியடித்தல் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தொடர்ந்து பொங்கல் பொங்கி வரும் பொழுது நூற்றுக்கணக்கான மாணவிகள் ஒரே சமயத்தில் பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரல் எழுப்பி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். மேலும் மாணவிகள் நம்முடைய பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விழா நடத்தப்படுவதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதேபோன்று சீர்காழியை அடுத்த சுபம் வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.