தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டத்துக்குட்பட்ட காமதேவமங்கலத்தில் உள்ள அய்யனார் கோயில் வளாகத்தில் கல்வெட்டுக்களும், இக்கோயிலுக்கு அருகாமையில் உள்ள வயல்வெளியில் சில சிற்பங்களும் இருப்பதாக அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

Continues below advertisement

இதன் பேரில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ்த்துறை உதவிபேராசிரியர் சோ.கண்ணதாசன், பொந்தியாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் முனைவர் கோ.தில்லைகோவிந்தராஜன், உக்கடை அப்பாவுதேவர் மேனிலைப்பள்ளி முதுநிலை வரலாற்று ஆசிரியர் ரெ,சின்னைய்யன், கல்லூரி மாணவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து இதுகுறித்து கள ஆய்வு செய்தவர்கள் கூறியதாவது, "கி.பி.12-13 ஆம் நூற்றாண்டு எழுத்து கொண்ட இரண்டு துண்டு கல்வெட்டுகளில்  முதலாவதில் திருமாது புவி, குலோத்துங்க, மூன்று மா என்ற சொற்கள் காணப்படுகின்றன. திருமாது புவி என்னும் சொல் இரண்டாம் இராசேந்திரனின் மெய்கீர்த்தியின் தொடக்க வரி என்றும்,  இரண்டாவது கல்வெட்டில் அரசனின் ஆட்சியாண்டு 42-வது  குறிப்பதுடன் ஏரியூர் நாடு என நாட்டு பெயரும், வேம்பன், குலோத்துங்கன் என்ற பெயர்களுடன் இது செய்யக் கடவ செய்து கல்வெட்டினது வேளானும் என்ற தொடரும் காணப்படுகின்றது. சோழ அரசர்களில் நீண்ட காலம் ஆட்சிபுரிந்தவர் முதலாம் குலோத்துங்க சோழர் என்பதால் இக்கல்வெட்டு அவர் காலத்தினைச் சேர்ந்ததாகும்.

Continues below advertisement

இங்கு காணும் சிற்பங்களில் துவார பாலகர் சிற்பம் இடதுகாலை ஊன்றி வலதுகாலை கதை என்னும் ஆயுதத்தின் மீது வைத்தும், கைகள் உடைந்த நிலையில் உள்ளது. சிவனின் தாண்டவ சிற்பம் இருகால்களை சதுர வடிவமாகக் கொண்டும், வலது முன்கை உடைந்தும், இடது முன்கை மார்புக்குக் குறுக்காகவும், வலது பின்கை முற்றிலும் உடைந்தும், இடது பின்கை மான் ஏந்தியும் காணப்படுவதுடன் இவற்றின் அருகாமையில் லிங்கம் ஒன்று காணப்படுகின்றது.

மேலும், இவ்வூர் குறித்து தஞ்சாவூர் பெரிய கோயில் கல்வெட்டில், பாண்டிய குலாசனி வளநாட்டு புறக்கிளியூர் நாட்டு காமதேவமங்கலம் என்றும், இவ்வூரைச் சேர்ந்த காஞ்சன் கொண்டையன் என்பவன்  முதலாம் இராசராசனின் பணிமகனாகப் புரவரித்திணை களத்து வரிப்புத்தக நாயகனாக இருந்ததையும், இவன் பெரிய கோயில் பிரகாரத்துப் பிள்ளையாருக்கு வெள்ளித்தளிகை ஒன்று வழங்கிதையும், முதலாம் இராசேந்திரன் காலத்திலும் இப்பதவியினை வகித்து வந்தார் என திருவாலங்காட்டு செப்பேட்டிலும் காணமுடிகின்றது.

இவ் வரிப்பொத்தக நாயகன் என்ற அரசியல் அதிகாரி காலத்திலிருந்து தொடர்ந்து இவ்வூரும், இவ்வூர்ச் சுற்றுப்பகுதிகளும் சிறப்புடன் விளங்கியிருத்தல் வேண்டும்." இவ்வாறு ஆய்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.