கார்த்திகை வந்தாலே அகல்விளக்கு விற்பனை அற்புதமாக தொடங்கி விடும். ஆனால் தற்போதைய நவீன மயமாகியுள்ள இக்காலத்தில் மக்கள் களிமண்ணால் ஆன அகல் விளக்குகளை புறந்தள்ளி சீன களிமண் எனப்படும் பீங்கான், மெழுகால் ஆன விளக்குகளை அலங்காரமாக வாங்குகின்றனர். இதனால் அகல் விளக்கு தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் நலிவடைந்து வருகின்றனர்.


கார்த்திகை மாதமும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோவில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவது கார்த்திகை தீபத் திருநாளாகும்.


திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வ சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாத வகையில் தடுக்கிறது. விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


கார்த்திகை மாதத்தில் வரும் மற்ற கார்த்திகை நாட்களை விட விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் லைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்கள், வீட்டின் முற்றத்திலும் அகல் விளக்கேற்றி கொண்டாடுவார்கள். நம் வீட்டிலுள்ள இருளை அகற்றி ஒளிமயமான வாழ்வைக் கார்த்திகை தீபத் திருநாள் கொடுக்கும். இந்த தீபத்தை களிமண்ணால் செய்த அகல் விளக்குகளில் ஏற்றி வழிபாடு நடத்து வருகின்றனர். ஆனால் தற்போது மாறிவரும் காலத்தில் அகல் விளக்குகளை புறந்தள்ளி பீங்கான் மற்றும் மெழுகு ஆகியவற்றால் தயாரான விளக்குகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.


இந்தாண்டு கார்த்திகை பண்டிகை வரும் 6ம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக தஞ்சாவூர் கீழவாசல் குயவர் தெருவில் சுமார் பத்துக்கும் அதிகமான குடும்பத்தினர் மண் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


ஒரு முகம், ஐந்து முகம், ஏழு முகம் கொண்ட அகல் விளக்குகள் என பல்வேறு வடிவங்களில் தயாரிக்கின்றனர். கார்த்திகை தீபத் திருநாளுக்காக அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர். காரணம் ஏரி, குளங்களில் களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம்  தெரிவிக்கிறது. ஆனால் களிமண்ணை எடுக்க அனுமதிப்பதில்லை, இதனால் தனியார் நிலங்களில் ஒரு யூனிட் ஆயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. மண்ணை பாதுகாத்து வைத்திருக்க இடவசதியும் இல்லை. மழை பெய்தால் அனைத்து மண்ணும் கரைந்து விடும்.


ஒரு அகல் விளக்கு உற்பத்தி செய்ய 70 காசுகள் வரை செலவாகிறது.  வியாபாரிகள் ஒரு அகல் விளக்கிற்கு 80 காசுகள் மட்டுமே கொடுக்கின்றனர். அவர்கள் சந்தையில் மூன்று விளக்குகள் 10 ரூபாய்க்கு என விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர். ஆனால் விளக்கை தயாரிக்கும் நாங்கள் மிகவும் பாதிப்பை சந்திக்கிறோம்.


நவீனம் என்ற பெயரில் பீங்கான், மெழுகுவர்த்தி அகல் விளக்குகள் விற்பனையும் நடக்கிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் மட்டுமின்றி பாரம்பரியமாக செய்து வரும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இத்தொழிலை விட்டுவிட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலை வந்துள்ளது. இப்போது பத்து குடும்பத்தினர் மட்டுமே இந்த அகல்விளக்கு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.


பிரகாசமான ஒளியை தரும் அகல்விளக்கின் பின்னணியில் உள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை இருள் சூழ்ந்துதான் காணப்படுகிறது.