தஞ்சாவூர்: கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

தஞ்சை- புதுக்கோட்டை வழித்தடத்தில் குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான 2 கரும்பு ஆலைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆலைக்கு தஞ்சை, ஒரத்தநாடு, வல்லம், கந்தர்வக்கோட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு அரவைக்கு கொண்டு வரப்படும்.

தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த 33 ஆண்டுகளாக நிலவி வரும் இரட்டை ஊதிய முறையை அகற்றி ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்க்கரை ஆலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த உண்ணாவிரதத்தை ஐஎன்டியூசி மாநில பொதுச்செயலாளர் சுப்ரமணியன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். சிஐடியூ சர்க்கரை ஆலை தொழிற்சங்க கிளைத் தலைவர் செல்வராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

உண்ணாவிரதத்தில் கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சர்க்கரை ஆலைகளில் கடந்த 33 ஆண்டுகளாக நிலவி வரும் இரட்டை ஊதிய முறையை மாற்றி ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும்.

சர்க்கரை ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் மிக குறைவாக உள்ளது. இந்நிலையில், காமன் கேடர் அலுவலர்களுக்கு மட்டும் 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த ஏன் முனைப்பு காட்டப்படுகிறது. சர்க்கரை ஆலைத் தொழிலாளர்களுக்கு, கடந்த 33 ஆண்டுகளாக நிலவி வரும் இரட்டை ஊதிய முறையை அகற்றி ஒரே மாதிரியான ஊதியத்தை வழங்க வேண்டும்.

சர்க்கரை ஆலையில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சர்க்கரை ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

உண்ணாவிரதப் போராட்டத்தை சர்க்கரை ஆலை பணியைளர்கள் சங்க தலைவர் சிவக்குமார் முடித்து வைத்தார். இதில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.