தஞ்சாவூர்: தென்னிந்தியாவின் கேம்ப்ரிஜ்ட் என்று பெருமையுடன் கூறப்படும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு கலை அறிவியல் கல்லூரி மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன காரணம்? இதன் பின்னணி என்ன?


தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கல்லூரி


நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கும், தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியின் பெருமையே தனிதான். இந்த கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.


ஆனால் இந்த கல்லூரியின் பெண் பேராசிரியை செய்த ஒரு செயல் தற்போது தமிழகம் முழுவதும் பெரிய அளவில் பேசும் பொருளாக உருமாற்றம் அடைந்து விட்டது. கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை தமிழ்த் துறை உதவிப் பேராசிரியராக இருக்கும் பெண் பேராசிரியை ஜெயவாணிஸ்ரீ அண்மையில் முதுகலை தமிழ்த் துறை 2ம் ஆண்டு மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் சாதி ரீதியாகவும், பெண்களைத் தரக்குறைவாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது.




பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் கடிதம்


இது தொடர்பாக அந்த பேராசிரியை ஜெயவாணிஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள், கல்லூரி முதல்வர் மாதவியிடம் புகார் கடிதம் கொடுத்தனர். ஆனால் கல்லூரி நிர்வாகம், அந்தப் பேராசிரியை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் போராட்டக்களத்தில் குதித்தனர். இதையடுத்து மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


15ம் தேதி முதல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்


கும்பகோணம் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியை ஜெயவாணிஸ்ரீ, மாணவர்களை சாதி ரீதியாகப் பேசியதாகக் கூறி மாணவர்கள் கடந்த 15ம் தேதி முதல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த பிரச்னைதான் தமிழகத்தின் பார்வையை கும்பகோணம் பக்கம் திரும்பி உள்ளது. 


இந்நிலையில் மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதையொட்டி, கல்லுாரியின் ஆட்சி மன்றக் குழுவில், இன்று (நேற்று) முதல் (28ம் தேதி) மறு உத்தரவு வரும் வரை காலவரையன்றி கல்லுாரியை மூட முடிவு செய்யப்பட்டது.  


கல்லுாரி காலவரையன்றி மூடப்படுகிறது


இது தொடர்பாகக் கல்லுாரி முதல்வர் மாதவி வெளியிட்ட செய்திக்குறிப்பில், கல்லுாரியின் அசாதாரண சூழல் கருதி கல்லுாரி ஆட்சிமன்றக் குழு தீர்மானத்தின் படி மறு உத்தரவு வரும் வரை, கல்லுாரி காலவரையன்றி மூடப்படுகிறது என தெரிவித்தார். இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் கல்லுாரி வாசலில் ஒட்டப்பட்டது. 


இருப்பினும் கல்லுாரி பேராசிரியையின் ஜாதி ரீதியான பேச்சு குறித்து மாணவர்கள் கண்டனம் தெரிவித்து, போராட்டங்களை தொடர்ந்தனர். அத்துடன், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட பேராசிரியை மற்றும் நடவடிக்கை எடுக்காத முதல்வர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தாளவாடியில் கல்லூரிக்கு பணியிட மாற்றம்


இந்நிலையில் இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கட்டும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு கல்லூரியில் பணியாற்றி வந்த தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஜெ.ஜெயவாணிஸ்ரீயை, ஈரோடு மாவட்டம், தாளவாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


கல்லூரிக்கு என்று உள்ள தனிப்பெருமை


இக்கல்லூரிக்கு என்று தனிப்பெருமை உள்ளது. கும்பகோணத்தில் தன்னாட்சி அனுமதியுடன் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். இக்கல்லூரி 1854-ம் ஆண்டில் மாகாணப் பள்ளியாக தொடங்கப்பட்டது. இது பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் செயற்பட்டு வந்த பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சிக் கல்லூரியாக இயங்கி வருகிறது. தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) தன்னாட்சி தகுதியுடன் செயற்பட்டு வருகிறது.


கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற வில்லியம் ஆர்ச்சர் போர்ட்டர், மற்றும் டி. கோபால் ராவ் ஆகிய கல்வியாளர்கள் முயற்சியால் 1867ல் அரசினர் கல்லூரியாக மேம்படுத்தப்பட்டது. 1881ஆம் ஆண்டில், இது ஒரு முழுமையான கல்லூரியாக மாற்றப்பட்டது. முதுநிலை பட்டப் படிப்புகள் 1966ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. தற்போது உள்ள கல்லூரி கட்டிடங்கள் 1871 மற்றும் 1875ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டவை. 


வி. எஸ். சீனிவாச சாஸ்திரி, பி. எஸ். சிவசாமி ஐயர், கணித மேதை இராமானுஜர் ஆகியோர் இக்கல்லூரியில் பயின்ற, குறிப்பிடத்தக்க மாணவர்களில் சிலராவர். தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாதய்யர் இக்கல்லூரியில் செயல்படும் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.