தஞ்சாவூர்: தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தரக்குறைவாக விமர்சனம் செய்து வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில் மாநகர அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது . இதில் உருவபொம்மையை எரிக்க முயன்றதால் போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் மத்தியில் தள்ளுமுள்ளு நடந்தது. 


தஞ்சாவூரில் அதிமுக ஆர்ப்பாட்டம்


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார். இதை கண்டித்து தஞ்சாவூர் மாநகர அதிமுக சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


மத்திய மாவட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார். நகர செயலாளர் சரவணன், மருத்துவ பிரிவு செயலாளர் துரை கோ. கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி ஐடி விங் மண்டல பொறுப்பாளர் நடராஜன், மாவட்ட அவைத்தலைவர் விளக்கமாறு கையில் நாகராஜன், அமைப்பு செயலாளர் காந்தி, விவசாய பிரிவு துணை செயலாளர் சிங். ஜெகதீசன், இணை செயலாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.




அதிமுகவினருடன் போலீசார் மல்லுக்கட்டு


தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உருவ பொம்மை அதிமுகவினர் எரிக்க முயற்சி செய்தனர் அப்போது போலீசார் பொம்மையை கைப்பற்ற முயற்சி செய்தனர். இதில் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பெண் காவலர் நாகராணி கையில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இருப்பினும் அதிமுகவினர் அண்ணாமலையின் உருவப்படத்தை விளக்குமாறால் அடித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


போர்க்களம் போல் மாறி போன போராட்டம்


பின்னர் போலீசார் அதிமுகவினரிடம் இருந்து உருவ பொம்மை பறித்து தண்ணீர் ஊற்றினர்.  இதனால் அந்த பகுதியே போர்களம் போல் ஆனது. தொடர்ந்து போலீசாரை கண்டித்து அதிமுகவினர் கண்டன கோஷம் எழுப்பினர். பின்னர் தொடர்ந்து அதிமுகவினர் அண்ணாமலையின் உருவப்படத்தை விளக்குமாறால் அடித்து கொண்டே கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் மனோகரன், பஞ்சு, புண்ணியமூர்த்தி, சதீஷ்குமார் மற்றும்மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியேற்றார். இவர் மாநில தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, தமிழக பாஜக-வில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறின.




2021ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக பிறகு கூட்டணியில் இருந்து விலகியது. இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை தான் காரணம் என்று இன்றளவும் கூறப்பட்டு வருகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை, தனது கட்சி சார்ந்த வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வந்தார். தமிழக அரசியலில் பிரதான எதிர்கட்சியாக பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சிகளில் பாஜக தீவிரம் காட்டுகிறது.
கூட்டணியில் ஏற்பட்ட முறிவு


கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலும் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வதாகவும் அறிவித்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியை உருவாக்கிய அண்ணாமலை தமிழக தேர்தல் களத்தில் மூன்றாவது அணி உருவாகவும் காரணமாக இருந்தார். இதே தேர்தலில் பாஜக போட்டியிட்ட பல தொகுதிகளில் அக்கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதிமுக மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிந்த நிலையில், இரு கட்சியை சேர்ந்தவர்கள் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனர். 


நேரடியாக மாறிப்போன கருத்து மோதல்கள்


இந்த கருத்து மோதல்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை இடையிலான நேரடி மோதலாக மாறியது.  அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக கூட்டத்தில் உரையாற்றிய மாநில தலைவர் அண்ணாமலை, "தவழ்ந்து காலில் விழுந்து பதவியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு பண்பாடு மிக்க விவசாயியின் மகனை, பச்சை இங்கில் 10 ஆண்டுகாலம் கையெழுத்து போட்ட தன்னைப் பற்றி பேச எந்த அதிகாரமும் கிடையாது" என்று மிகக் கடுமையாக பேசினார்.


கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன்


இதற்கு அதிமுக தலைவர்களும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர். கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் நேற்று நிருபர்களை சந்தித்த அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெரிவித்த கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று உறுதியாக தெரிவித்தார். இந்நிலையில்தான் தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டம் போர் களம் போல் மாறிவிட்டது.