தஞ்சாவூர்: யுஜிசி நகலை தீயிட்டு கொளுத்தி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் செயலாக உள்ளது. துணைவேந்தர் தேர்தல் குழுவில் ஆளுநரை நியமிக்கும் யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் யூஜிசி நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. அந்த வகையில் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியை சேர்ந்த 500க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 




ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க கிளைத் தலைவர் ரஞ்சித் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அரவிந்தசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் திடீரென்று யுஜிசியின் அறிக்கைகள் அடங்கிய 38 பக்கங்களை கொண்ட நகலை தீயிட்டுக் கொளுத்தினர்.தொடர்ந்து பாதுகாப்பு பணி மேற்கொண்ட போலீசார் மாணவர்களை தடுத்து நிறுத்தி தீட்ட நகலை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.


இதேபோல் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு  கிளை செயலாளர் கோபிநாதன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரகுராமன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில்  துணைவேந்தர் தேர்தல் குழுவை ஆளுநர் நியமிக்கும் யு.ஜி.சி. அறிவிப்பை திரும்ப பெற கோரி கோஷங்கள் எழுப்பினர். இதில் துணை செயலாளர் சீதாலட்சுமி மற்றும் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் இளமாறன், மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.