தஞ்சாவூர்: தஞ்சாவூர் கோடியம்மன் கோயிலில் இன்று 16 ஏழை ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 


இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மராமத்து பணிகள், குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர், குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோயில் சொத்துக்களை மீட்டு, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாத்து வருகின்றனர்.


அறநிலையத்துறையின் பணிகள்


மேலும், கோயில்களில் கல்வி, அறநிலையத்துறை நிறுவுதல், சித்தர்கள், அருளாளர்களுக்கு சிறப்பு விழாக்கள் நடத்துதல், பொருளாதாரத்தில் பின்தங்கிய துணைவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் செய்து வைத்தல், மகா சிவராத்திரி, நவராத்திரி விழாக்கள் பக்தர்கள் பங்கேற்பு என அறப்பணிகள் நடைபெற்று வருகின்றன.


இந்து சமய அறநிலையத் துறை 2022-2023-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, 4.12.2022 அன்று கோயில்கள் சார்பில் தமிழக முதல்வர் தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தார். அதன்பின், மாநிலம் முழுவதும் மொத்தம் 500 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் 2023-2024-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, “பொருளாதாரத்தில் பின்தங்கிய தம்பதிகளுக்கு கோயில்கள் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 4 கிராம் தங்கத் தாலி உட்பட 600 திருமணங்கள் நடத்தப்படும்”. தொடக்கத்தில் 7.07.2023 அன்று தமிழக முதல்வர். 34 ஜோடிகளின் திருமணத்தை முன்னின்று நடத்தி பரிசுகளை வழங்கினார். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 2022-2023-ம் நிதியாண்டில் 500 ஜோடிகளுக்கும், 2023-2024-ம் நிதியாண்டில் 600 ஜோடிகளுக்கும் என மொத்தம் 1,100 திருமணங்கள் கோயில்கள் சார்பில் நடத்தப்பட்டுள்ளன.




700 ஜோடிகளுக்கு திருமணம் என அறிவிப்பு


இந்து சமய அறநிலையத் துறை 2024-2025-ம் நிதியாண்டுக்கான மானியக் கோரிக்கையில், “கோவில்கள் சார்பில் ரூ.60 ஆயிரம் மதிப்பிலான 4 கிராம் தங்கத் தாலி உள்ளிட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் இன்று 21ம் தேதி சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் 31 ஜோடிகளின் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்து, மணமக்களுக்கு பரிசுகள் மற்றும் பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.


தஞ்சையில் 16 ஜோடிகளுக்கு திருமணம்


இதையடுத்து தஞ்சை இணை ஆணையர் மண்டலத்தின் சார்பில் தஞ்சை கோடியம்மன் கோயிலில் 16 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. விழாவிற்கு இந்து அறநிலையத்துறை மண்டல இணை இயக்குனர் மாரியப்பன் தலைமை வகித்தார். அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 16 ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டிகேஜி. நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.


மணமக்களுக்கு 4 கிராம் திருமாங்கல்யம், புத்தாடை, மிக்ஸி, பீரோ, கட்டில் கைகடிகாரம், மெத்தை பாத்திரங்கள் உள்பட பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தலைமை எழுத்தர் பிரகாசம், திட்டை கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், மாரியம்மன் கோவில் கண்காணிப்பாளர் மணிகண்டன், பெரிய கோவில் கண்காணிப்பாளர் செந்தில்குமரன், திமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.