மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தில் வெகு விமர்சையாக சதய விழா தஞ்சாவூரில் கொண்டப்பட்டு வருகிறது. இந்தாண்டு சதய விழா நேற்று மங்கள இசை, களிமேடு அப்பர் பேரவை திருமுறை அரங்கத்துடன் சிறப்பாக தொடங்கியது. தொடர்ந்து சதயவிழாக்குழு தலைவர் செல்வம் வரவேற்புரையாற்றினார். விழாவில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பேசியதாவது; நமது நாட்டை பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் சதய விழா சிறப்பாக கொண்டாடப்படுவது ராஜராஜசோழனுக்கு தான் என்பது பெருமையான விஷயம். ஒரு மன்னன் மக்களை நலனை முதன்மையாக கொண்டு செயல்பட்டால், காலத்தினால் யாராலும் மறக்க முடியாது என்பதற்கு ராஜராஜசோழன் தான் சான்று. இதற்கு களக்காட்டூர் காடன் மைந்தன் கல்வெட்டு சாட்சி. மேலும், கண்ணன் ஆரூரான் என்பவர் ராஜராஜன் பணியாள் ஒருவர் தான் வெட்டியக் குளத்திற்கு ராஜராஜன் சோழன் பெயரை வைத்துள்ளார். இத்தகையை அன்பை பெற்றவர் ராஜராஜசோழன். காலத்தினால் அழிக்க முடியாது பல பொக்கிஷங்களை தந்தார். ஒரு மன்னன் போரில் படைக்கு பின் இருந்து வழிநடத்தாமல், படைக்கு முன் நின்று வழிநடத்துவதில் சிறந்தவர் ராஜராஜன் என்பது கரந்தை செப்பேடுகள் தெரிவித்துள்ளது இவ்வாறு அவர் பேசினார். பின்னர் கருத்தரங்கம், திருமுறை, திருமுறையின் திருநடனம், பரதநாட்டியம், நாதசங்கமம், கவியரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது. விழாவில், மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், இந்து சமய அறநிலைத்துறை இணை கமிஷனர் சூரிய நாராயணன், உதவி கமிஷனர் கவிதா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். பின்னர் நாளை (3ம் தேதி) தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருக்கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குதல், மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்தல், திருமுறை ஓதுவார் திருமுறைப்பண்ணுடன் ராஜவீதிகளில் திருமுறைத் திருவீதி உலா ஆகியவை நடைபெறுகிறது. தொடர்ந்து, பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் 38 மங்கள பொருட்களால் பேரபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. மாலை பல்வேறு நிகழ்ச்சிகளும், இரவு ராஜராஜசோழன்,உலோகமாதேவி ஐம்பொன் சிலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலாவுடன் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.
தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜ சோழன் சதயவிழா கோலாகலமாக தொடக்கம்
என்.நாகராஜன் | 02 Nov 2022 06:05 PM (IST)
தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1037வது சதயவிழா நேற்று வெகு விமரிசையாக தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ராஜராஜ சோழன் சதய விழா தொடக்கம்