நாகை மாவட்டம் நாகை ஒன்றியம் வடகுடி ஊராட்சி பகுதாயம் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கூலி விவசாயிகள் மட்டுமே உள்ள அப்பகுதியில் சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் தொட்டி வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்காக பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சீரமைக்காமல் இருந்த சாலைகள்  சேரும் சகதியுமாக படு மோசமாக மாறியதால் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைக்காலங்களில் கடும் சிரமத்தை சந்திக்கும் கிராம மக்கள் இன்று சேரும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நட்டு நாட்டுப்புற பாடல் பாடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.




மழையில் நனைந்தபடி நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் பல ஆண்டுகளாக  பழுதடைந்துள்ள 2 கிலோ மீட்டர் சாலையை சீரமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தவும், பயன்படாத மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சரி செய்யவும், நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். பழுதடைந்த சாலையால் ஆபத்து காலங்களில் அவசர ஆம்புலன்ஸ் வாகனங்கள் தங்களது கிராமத்தின் உள்ளே வருவதில்லை என்று வேதனை தெரிவித்த கிராம மக்கள், தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.




வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி


உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் இறந்தவர்களின் சமாதியை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.

 

இறந்த உறவினர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்றைய தினத்தை கல்லறை தினமாக கிருஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி  பேராலயத்தில் சிறப்பு திருப்பலி இன்று நடைபெற்றது. ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நடைபெற்றது.



 

நிகழ்வில் பங்கேற்ற கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அடக்கம் செய்யப்பட்ட குருக்கள் துறவியர்கள், விசுவாசிகள், சகோதர சகோதரிகள் மற்றும் அனைத்து ஆன்மாக்களுக்கும் தங்களுடைய உறவினர்களின் கல்லரைகளை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரித்து, உணவுப்பண்டங்களை வைத்து படையலிட்டு, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில்  உள்ள கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரிடரில் சிக்கி உயிரிழந்தவர்களின் நினைவு ஸ்தூபியில் வேளாங்கன்னி பேராலயத்தின் சார்பில் கல்லரைத்திருநாள் வழிபாடு நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற கல்லறை திருநாளில் வெளிநாடு, வெளி மாவட்டங்கள், வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் பங்கேற்றனர்.