தஞ்சை மாவட்டம் கல்லணையில் திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூரை நோக்கி பெருக்கெடுத்து வந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. தொடர்ந்து அணையில் இருந்து உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் அளவு 1.30 லட்சம் கனஅடியாக இருந்தது தற்போது 73391 கனஅடியாக உள்ளது. இதனால் ஆறுகளின் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 988 கன அடியில் முக்கொம்பு காவிரியில் இருந்து கல்லணைக்கு 48, 099 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இவற்றில் பாசனத் தேவை போக மிகுதியான தண்ணீரை மணல் போக்கி மற்றும் கொள்ளிடம் நீரொழுங்கி மூலம் 28 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம் காட்டி வருகின்றனர்.


 





நாற்று நடுதல், விதை தெளிப்பு, பாய் நாற்றங்கால் நடவுப்பணி என்று சாகுபடி பணிகள் வெகு வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் ஆர்வ மிகுதியில் ஆற்றில் இறங்கி குளிப்பதால் உயிர் பலி ஏற்படும் என்பதால் அது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தற்போது கல்லணை மற்றும் முக்கொம்பு நீரையும் சேர்த்து 97 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது. இதை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் செல்வதை பார்வையிட்டு தண்ணீரை பாதுகாப்பாக வெளியேற்றவும், பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்காமல் பாதுகாக்க இருப்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து தண்ணீர் வருது இதே அளவில் நீடித்தால் கல்லணைக்கு சுற்றுலா பயணி வருவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இந்த ஆய்வின் போது கீழ்க்காவிரி வடிநிலவட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், வெண்ணாறு கோட்ட பொறியாளர் மதன சுதாகர், கல்லணை கால்வாய் கோட்ட பொறியாளர் பாண்டி, உதவி செயற் பொறியாளர்கள் சிவக்குமார், மலர்விழி, உதவி பொறியாளர்கள் திருமாறன், பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்வதால் பல பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண