காலையில் இன்டர்வியூ... மதியம் கிடைத்த கடிதம்: என்ன கொடுமைங்க இது
நேர்முக தேர்வுக்கான கடிதம், கார்த்திகேயேனுக்கு கடந்த பிப்.5 ம் தேதி காலை 10:30 மணிக்கு, பாஞ்சூர் அஞ்சல் நிலையத்தில் இருந்து தபாலை வழங்கியுள்ளனர். தபாலை பார்த்த கார்த்திகேயேனுக்கு அதிர்ச்சியடைந்தார்.

தஞ்சாவூர்: காலையில் நடக்க உள்ள இன்டர்வியூவுக்கு மதியம் கடிதம் வந்தால் என்ன செய்வது. அப்படிப்பட்ட சம்பவம் நடந்தது தஞ்சாவூர் பகுதியில்தான்.
தஞ்சாவூர் மாவட்டம் பாச்சூர் மொட்டையன் தோப்பு பகுதியை சேர்ந்தவர் கனகசபாபதி மகன் கார்த்திகேயன் (31). 10ம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ளார். இவரது தாய் நாகலெட்சுமி. கடந்த 2000 ஆண்டு கனகசபாபதி இறந்து விட்டார். இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு, அறநிலையத்துறையின் கீழ், சென்னை, திருவொற்றியூரில் உள்ள தியாகராஜசுவாமி கோயிலில் டிரைவர், தபேதார், துாய்மை பணியாளர்கள், காவலர், வேதபாராயணம், சமையலர் என 12 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.

இந்த அறிவிப்பை கேள்விப்பட்ட கார்த்திகேயேன் காவலர் பணிக்காக விண்ணப்பம் செய்து இருந்தார். அதற்கான நேர்முக தேர்வு, கடந்த 5ம் தேதி காலை 9 மணிக்கு, திருவொற்றியூரில் உள்ள தியாகராஜசுவாமி கோவில் உதவி கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதற்காக அறநிலையத்துறை சார்பில் நேர்முக தேர்விற்காக கடந்த ஜனவரி 27ம் தேதி கார்த்திகேயேனுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.
ஆனால், நேர்முக தேர்வுக்கான கடிதம், கார்த்திகேயேனுக்கு கடந்த பிப்.5 ம் தேதி காலை 10:30 மணிக்கு, பாஞ்சூர் அஞ்சல் நிலையத்தில் இருந்து தபாலை வழங்கியுள்ளனர். தபாலை பிரித்து பார்த்த கார்த்திகேயேனுக்கு அதிர்ச்சியடைந்தார். மேலும், தபால் தாமதமாக வந்தால் தனது நேர்முக தேர்வுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தனது வேலைவாய்ப்பு பறிபோன நிலையில் கார்த்திகேயேன் மிகவும் வேதனையுடன் தபால் நிலையத்திற்கு சென்று கேட்டுள்ளார்.
அப்போது தபால் நிலைய ஊழியர்கள், 4ம் தேதி காலை கடிதம் கொண்டு வந்தபோது வீட்டில் யாரும் இல்லை என்பதால் தபாலை திருப்பி எடுத்து வந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் கார்த்திகேயன் தவித்து வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது தந்தையின் மரணத்திற்கு பிறகு எங்கள் குடும்பம் வறுமை நிலைக்கு சென்றது. எனக்கு மூன்று சகோதரிகள் உள்ளனர். நான் 10ம் வகுப்பு வரை படித்து உள்ள சூழலில், அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கனவுடன் விண்ணப்பித்தேன். ஆனால் தபால் ஊழியர்கள் அலட்சியதால், எனது நேர்முக தேர்வும், வேலையும் பறிபோனது. இது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனடியாக விசாரித்து, எனக்கு வேலை வழங்க வேண்டும்.
எனது குடும்பத்தின் வறுமையை போக்க நடவடிக்கை வேண்டும். அத்துடன் அலட்சியாக செயல்பட்ட தபால் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.