தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 8 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி திருட்டுத்தனமாக பாதாளச் சாக்கடை இணைப்பு பயன்படுத்திய இரண்டு பிரபல ஓட்டல்கள் – மதுபானக் கூடம் (பார்) ஆகியவற்றிற்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையாக ரூ.1.09 கோடி அபராதம் விதித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாநகராட்சிப் பகுதியை ஒட்டியுள்ள ஊராட்சிப் பகுதிகளில் உள்ள தங்கும் அறைகளுடன் கூடிய ஓட்டல்கள் மற்றும் கடைகளில் அனுமதியின்றி பாதாளச் சாக்கடை இணைப்பு பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில், மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், செயற் பொறியாளர் ஜெகதீஸன் ஆகியோர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே நீலகிரி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள தங்கும் அறைகளுடன் கூடிய ஹோட்டல் ராம்நாத் மற்றும் ஹோட்டல் அண்ணாமலை ஆகிய இரண்டு பிரபல ஓட்டல்கள் மற்றும் மதுபானக் கூடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை உரிய அனுமதியின்றி திருட்டுத்தனமாக பாதாளச் சாக்கடை இணைப்பில் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.
கடந்த 8 ஆண்டுகளாக அனுமதியின்றி பாதாளச் சாக்கடை குழாய்கள் இணைப்பு வழங்கப்பட்டு கழிவு நீர் வெளியேற்றப்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட இணைப்புகளைத் துண்டிக்க மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டதோடு, சம்பந்தப்பட்ட 2 ஓட்டல்கள் மற்றும் மதுபானக் கூடத்தின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார். மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்பேரில், உதவி செயற் பொறியாளர் ராஜசேகரன், உதவிப் பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுவந்த பாதாளச் சாக்கடை இணைப்பை துண்டித்தனர்.
மேலும், 8 ஆண்டுகளாக அனுமதியின்றி பாதாளச் சாக்கடை இணைப்பை பயன்படுத்தி வந்த அதிமுக முன்னாள் கவுன்சிலருக்குச் சொந்தமான ஹோட்டல் ராம்நாத் என்ற ஓட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.62.54 லட்சம் அபராதம் விதித்தனர். ஹோட்டல் அண்ணாமலை என்ற மற்றொரு ஓட்டலின் உரிமையாளருக்கு ரூ.44.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அனுமதியின்றி பாதாளச் சாக்கடை இணைப்பு பயன்படுத்திய மதுக்கூடத்திற்கு ரூ.2.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இவை மூன்றிற்கும் சேர்த்து மொத்தம் ரூ.1.09 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தஞ்சை மாநகராட்சிப் பகுதியில், ஏராளமான பகுதிகளில் அனுமதியின்றி பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் வந்துள்ளது. பொது மக்கள் யாரும், உரிய அனுமதியின்றி, செயல்படுத்தப்பட்டு வரும் பாதாளச் சாக்கடை இணைப்பை பயன்படுத்துவது தெரியவந்தால் அவர்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் எச்சரித்துள்ளார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள் சில...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்