"சிறுவயதில் திருமணம் நடந்து கணவர் இறந்து விட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து வந்தவர் என்னை திருமணம் செய்து கொண்டு கர்ப்பிணியாக்கி விட்டு தலைமறைவாகி விட்டார். அவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வையுங்கள்" என்று கூறி கண்ணீர் மல்க கலெக்டரில் மனு கொடுத்தார் நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குஜராத் மாநிலம் சபர்மதி காலிகாம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாபாய்- சரோஜ் தம்பதி. இவர்களின் மகள் சரிதா (28). இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் நடந்து கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் இவரை தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆம்பலாப்பட்டு தெற்கு தெருவைச் சேர்ந்த விஜயகுமார் (38) என்பவர் திருமணம் செய்துகொண்டு, தனிக்குடித்தனம் நடத்திவிட்டு கடந்த இரு மாதங்களாக தலைமறவாகிவிட்டார்.

தற்போது நிறை மாத கர்ப்பிணியாக உள்ள சரிதா, மாயமான கணவரை மீட்டுத் தரக்கோரியும், மிரட்டல் விடுக்கும் கணவர் குடும்பத்தாரிடமிருந்து தனக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க புகார் மனுவை அளித்தார். நிறைமாத கர்ப்பிணி பெண் மாநிலம் விட்டு மாநிலம் வந்து இப்படி படாதபாடும் நிலையை பார்த்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தவர்கள் பெரும் வேதனையடைந்தனர்.




மனு கொடுத்தப் பின்னர் சரிதா நிருபர்களிடம் கூறியதாவது: நான் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். எனக்கு சிறு வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. பின்னர் எனது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இருப்பினும் என்னை 60 வயது முதியவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றனர். அப்போது மிகுந்த மனஉளைச்சலில் சிக்கி தவித்து வந்தேன். முதியவருக்கு திருமணம் செய்து வைத்தால் என் வாழ்வு அதோகதிதான் என்று நினைத்த நேரத்தில் குஜராத்துக்கு வேலைக்கு வந்த விஜயகுமார் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதனால் அவரை நம்பி அங்கிருந்து அவருடன் புறப்பட்டு வந்தேன். என்னை அழைத்துக் கொண்டு பழநிக்கு வந்து திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் விஜயகுமாரின் ஊருக்கு வந்த பின்னர் தான் தெரிந்தது. அவருக்கு ஏற்கெனவே திருமணம் நடந்து ஒரு மகள் இருப்பது. அதை மறைத்து தான் என்னை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று. அதிர்ச்சியடைந்தாலும் எனக்கு யாரும் இல்லாத நிலையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னர் என்னை சமாதானப்படுத்தி தனியாக ஒரு வீட்டில் வைத்து குடும்பம் நடத்தி வந்தார் விஜயகுமார். இந்நிலையில் நான் கர்ப்பிணி ஆனேன். கடந்த இரு மாதங்களாக எனது கணவரை காணவில்லை.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை எனது கணவர் குடும்பத்தினர் மிரட்டி வருகின்றனர். நான் தற்போது கோயில், பேருந்து நிறுத்தம் போன்ற இடங்களில் தங்கி பொழுதை கழித்து வருகிறேன். இப்போது எட்டு மாத கர்ப்பம். இந்த நிலையில் ஆதரவின்றி தவித்து வருகிறேன். என்னுடைய கணவரை கண்டுபிடித்து, எனக்கு பாதுகாப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.